--> -->

கடற்கரைகளை சுத்தம் செய்யும் கடற்படையினரின் நடவடிக்கை தொடர்கிறது

ஒக்டோபர் 01, 2019

சுற்றுச்சூழலை குறிப்பாக கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கும்  பணியின்  ஒரு அங்கமாக கடற்படையினரால் கடற்படை கட்டளையகங்கள் மற்றும் அவற்றை  அண்மித்துள்ள பகுதிகளில் உள்ள கடற்கரைகளை தூய்மையாக்கும்  திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் பணிப்புரைக்கமைய குறித்த திட்டங்கள்  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, வட பிராந்திய கட்டளையகத்தின் கீழ் உள்ள கடற்படை வீரர்களினால் வெற்றிலைக்கேணி மற்றும்  பருத்தித்துறை பிரதேசங்களில்  கடற்கரைகளை தூய்மையாக்கும் திட்டம் திங்களன்று (செப்டம்பர், 30) முன்னெடுக்கப்பட்டது.  இதன்போது,குறித்த கடற்கரை பகுதிகளில் காணப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுப்பொருட்களை உள்ளடக்கிய குப்பை கூளங்கள்  மற்றும்  சுற்றுச்சூழலுக்கு பாதுப்பை ஏற்படுத்தும் ஏனைய பொருட்கள் என்பன சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை  வீரர்களினால் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

மேலும், இதுபோன்ற மற்றுமொரு  திட்டம்  வடபிராந்திய கடற்படை வீரர்களினால் அலியாவலி, சில்லேலி, சவுக்காடு,பெருங்காடு, காங்கேசந்துரை மற்றும் மண்டைத்தீவு ஆகிய கடற்கரை பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த திட்டத்தின் மற்றுமொரு பகுதியாக, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் கடற்படைவீரர்களினால் முள்ளிக்குளம் முதல்   புக்குளம் வரையும் ஆலங்குடா முதல் நுரைச்சோலை வரையிலுமான கடற்கரை பகுதிகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று  (செப்டம்பர்,27) சுத்தம் செய்யப்பட்டன.

இதேவேளை,  திருகோணமலையில் உள்ள கடற்படை வீரர்கள் கடற்படை தளத்தின்  “பசுமை மற்றும் கடல் வள திட்டத்தின்” கீழ்  கடற்கரைகளை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதன்போது சோபா தீவின் கடற்கரை பகுதிகளில் காணப்பட்ட  குப்பை மற்றும் பிற கழிவுப்பொருட்கள் என்பன  சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டன.