--> -->

தேரவாத கற்கை நிலையத்தில் கடற்படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

நவம்பர் 16, 2019

ஆனமடுவ, கறுவலகஸ்வெவ பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச தேரவாத கற்கை நிலையத்தில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றையதினம்   ஜனாதிபதி அவர்களினால் வைபவ ரீதியாக  திறந்துவைக்கப்பட்டது.  கடற்படையினரால்   நிர்மாணிக்கப்பட்ட  நீர்சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் இங்கு வருகை தரும் பக்தர்கள்   தூய குடிநீரினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் கலந்துகொண்டனர்.  

விவசாய சமூகத்தினர்  மத்தியில் ஏற்படுகின்ற சிறுநீரக நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும்  நாட்டு மக்களுக்கு  தூய குடிநீரினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும்  இலங்கை கடற்படையின் சமூக  நலத்திட்டத்தின்கீழ் இதுவரை  நாடு பூராகவும் பல  குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்  நிறுவப்பட்டுள்ளன.  குறித்த இத்திட்டம்  சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி  அனுசரணையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற  அதேவேளை, இதற்காக  அரச  மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனவந்தர்கள் ஆகியோர் இத்தேசிய திட்டத்திற்கான  ஆதரவை வழங்கி வருகின்றனர்.  

இந்நிகழ்வில்  மகா சங்க உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அதிகளவான  உள்ளூர்வாசிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.