புதிய பாதுகாப்பு செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்பு
நவம்பர் 20, 2019புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை இன்று (நவம்பர், 20) பொறுப்பேற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த புதிய பாதுகாப்பு செயலாளருக்கு விஷேட மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமது உத்தியோகபூர்வ அலுவலக அறைக்கு பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களினால் அழைத்து செல்லப்பட்ட பாதுகாப்பு செயலாளர் சுபவேளையில் மகா சங்கத்தினரால் ஆசீர்வாதத்துடன் முதல் ஆவணத்தில் கையொப்பமிட்டு தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் நேற்றையதினம் (நவம்பர், 19) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந் நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிரதானிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயல்திறனை அதிகரிக்க அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
தர்மபாலா வித்தியாலயம் மற்றும் ஆனந்த கல்லூரி ஆகிவற்றின் பழைய மாணவரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள், 1981ஆம் ஆண்டு தியத்தலாவை இராணுவ கலாசாலையில் பயிற்சியினை பூர்த்தி செய்த பின்னர் பயிலுனர் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.
மேலும் அவர் தனது இராணுவ வாழ்க்கையில், வன்னி- பாதுகாப்பு படை தலைமையக பொது கட்டளை அதிகாரிகாரியாக கடைமையாற்றியதுடன் மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை இராணுவத்தின் 53ம் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் செயலாற்றினார். செப்டம்பர் மாதம் 4ம் திகதி 2016 இல் ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் பிரேசிலின் முன்னாள் துணை தூதுவராக கடைமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                       
                                      