logo

வெளிநாட்டுத் தலையீடுகளை அரசாங்கம் அனுமதிக்காது - பிரதமர் தெரிவிப்பு

டிசம்பர் 13, 2019

நாட்டின் உள் விவகாரங்களில் சில வெளிநாட்டு அமைப்புக்கள் தலையிட முயற்சிப்பதாகவும், இதேவேளை இலங்கையின் தேசிய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றை அரசாங்கம் பாதுகாக்கும். என்பதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.

"அரசாங்கம் இராணுவப் படைகளுக்குள் மேற்கொள்ளப்பட்ட பதவி உயர்வுகளுக்கு அவ்வாறான வெளிநாட்டு அமைப்புக்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்தன. இவ்வாறு இராணுவத்தின் உள்விவகாரத்தினுள் வெளிநாட்டுத் தலையீடுகளை மேற்கொள்ள இறையாண்மை உள்ள நாடு அனுமதிப்பதில்லை" எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின்  பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் இதன்போது தொடந்தும் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள்,   இலங்கையின் தேசிய இறையாண்மையையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாக்ககூடிய அரசாங்கம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நோக்கத்தை அடைவதற்கு  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ் அரசாங்கம் மேற்கொள்ளும் என்பதாகவும் தெரிவித்தார்.

ஆசியாவில் சிவில் மக்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட பாரிய மற்றும் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இந்த வருடத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற சம்பவமாகும். நாடு சிறியதாயினும் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால் சிறியதல்ல. எனவும் தெரிவித்த அவர் ஆசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு சிறிய தீவாகும். இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகலின் பயங்கரவாதம் உட்பட  அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்கொண்டது. இங்கு இவைகள் எதுவும் சிறிய அளவில் இடம்பெறுவதில்லை. எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

" 2008ம் ஆண்டு இந்தியாவில் மும்பை நகரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் பங்கு கொள்ளவில்லை ஆனால் கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அனைவரும் இலங்கையர்கள் என்பதை நாம் அனைவரும் கருத்திற்கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் படகு மூலம் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தமை தொடர்பான தகவல்களின் காரணமாக இந்தியா முழுவதும் பாதுகாப்பு படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். எமக்கும் இதனை கட்டுப்படுத்த முடியாமல் போனால் இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் மாத்திரமன்றி மியன்மார், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும், இதன் காரணமாக இந்த புதிய பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு முடியாமல் முழு உலகமும் இருந்த சந்தர்ப்பத்தில் தான் நாம் வெற்றியை பெற்றோம். இதன் காரணமாக அது இலங்கைக்கு கிடைத்த வெற்றி மாத்திரமல்ல முழு உலகிற்கும் வெளிச்சத்தையும், புதிய எதிர்பார்ப்பையும் தேடித்தரும் விடயமாக அமைந்தது.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் புதிய பயங்கரவாதம் தொடர்பில் புலனாய்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே முக்கியத் தேவையாகும் 2008ம் ஆண்டு இந்தியாவில் மும்பை நகரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் பங்கு கொள்ளவில்லை ஆனால் கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அனைவரும் இலங்கையர்கள். இந்த அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு மாத்திரம் வரையிறுக்கப்பட்ட அச்சுறுத்தல் அல்ல பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் மேம்பாட்டுக்காக இந்த இஸ்லாமிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் தரையிலும் கடலிலும் வானிலும் செல்ல வேண்டியிருந்தாலும் புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புலனாய்வுத்துறையின் நடவடிக்கைகள் அவசியமாகிறது. துரதிர்ஷ்டவசமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின் புலனாய்வுத்துறை முடங்கியிருந்தது. உளவுத்துறையின் உறுப்பினர்கள் முந்தைய அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டு மற்றும் தவறான குற்றச்சாட்டுகளால் முன்வைக்கப்பட்டு சிறையிலிடப்பட்டனர். எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு யுத்த காலத்தில் இருந்த பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு சபை முக்கியஸ்தர்கள் இருவர், இராணுவ தளபதிகள் இருவர், கடற்படைத்தளபதிகள் நால்வர், விமான படைத்தளபதிகள் இருவர், புலானய்வு பிரிவின் தலைமை அதிகாரி, இராணுவ பொலிஸ் விசேட படையணி, கடற்படை, ஆகியவற்றை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சிரேஷ்ட அதிகாரிகள் இவ்வாறு இடையூறுகளுக்கும் சிரமங்களுக்கும் உள்ளானார்கள். இதில் சிலர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சில வாரம் தொடக்கம் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் நோக்கம் எமது படை வீரர்கள் அல்ல. திருடர்கள் மற்றும் கொலையாளிகள் என்ற கருத்தில் இலங்கையர்களைப் போன்று வெளிநாட்டவர்கள் மனதிலும் இவர்கள் தொடர்பில் அவமான பெயரை எற்படுத்தினர். உலகில் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் இவ்வாறு தமது தமது படைகளை குறைத்து மதித்ததில்லை. ஆயுத படை என்பது தேசிய பாதுகாப்பாகும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கம் மாறிய பின்னர் நாட்டில் ஏற்பட்ட வெளிநாட்டு எதிரிகளின் சக்தியினால் இலங்கை ஆக்கிரமிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஆயுத படையை வேட்டையாடி அவர்களது உயிரிற்கும் அச்சுறுத்தல் எற்படுத்தினர்.

மகா சங்கத்தினரை அடிமைப்படுத்தி இந்த நாட்டின் பெரும்பாண்மை சமூகத்தை மிதித்து 4 தசாப்த காலம் நிலவிய சிவில் யுத்தத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாதவற்றை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்ததை நாம் கடந்த 5 வருட காலப்பகுதியில் காணக்கூடியதாக இருந்தது. கடந்த அரசாங்கம் ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் முன்னால் சென்று வெளிநாட்டு நீதிபதிகளையும் முக்கியஸ்தர்களையும் கொண்ட எமது இராணுவ அங்கத்தவர்களுக்கு எதிராக இராணுவ குற்றச்சாட்டு நீதி மன்றம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கைக்கு எதிராக பிரேரணையை நிறைவேற்றுவதை நாம் கண்டோம். இதனை செய்தது இலங்கையிலேயே மக்களினால் அதிகாரத்திற்கு அமர்த்தப்பட்ட அரசாங்கமாகும். இன்று கடந்த 5 வருட காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை சரி செய்வதற்காக பாரிய மக்கள் ஆணையுடன் ஜனாதிபதி ஒருவரை இந்த நாட்டு மக்கள் நியமித்துள்ளனர்.

மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி, உள்நாட்டு வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலத்துறை மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான  கெளரவ. சமல் ராஜபக்ஷ அவர்கள்,  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் இங்கு வருகை தந்திருந்தனர்.  இங்கு வருகைதந்த பிரதம அதிதி மற்றும் ஏனைய அதிதிகளையும் கல்லூரியின் தளபதி  மேஜர் ஜெனரல் தேமடன்பிட்டிய  அவர்கள் வரவேற்றார்.  இக்கலூரியின்    13ஆவது பாடநெறியில் இலங்கை உட்பட பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு, மலேசியா, ஓமான் ருவாண்டா சூடான், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் 76 இராணுவ,  33 கடற்படை மற்றும்  30 விமானப்படை ஆகிய முப்படைகளைச்சேர்ந்த சுமார் 167 அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

நாட்டுக்காக தனதுயிரை அர்ப்பணித்த யுத்த வீரர்களுக்கா ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது வெற்றிகரமான பட்டதாரிகள் தங்களுக்கான சான்றிதழை பிரதம அதிதிகளான கெளரவ. சமல் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரிடமிருந்து  பெற்றுக்கொண்டனர். விஷேட விருதுகளை பிரதம அதிதி  அவர்கள் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், பாதுகாப்புப் அதிகாரிகளின் பிரதானி, முப்படை தளபதிகள், முப்படையின் சிரேஷ்ட  அதிகாரிகள் உட்பட விஷேட அழைப்பின் பேரில் வருகைதந்த பலரும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியானது, இலங்கையில் உயர்தர பாதுகாப்பு கற்கைகளை மேற்கொள்ளும் வகையில் 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி இராணுவ கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி எனும் பெயருடன் சுமார் 26 மாணவ அதிகாரிகளுடன் முதல் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது.   இக்கல்லூரியானது இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் பதவிநிலைக்காக  தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் அதிகாரிகளின் தொழில்முறை அறிவு மற்றும் புரிதலை மேம்படுத்தும் நோக்கில்  நிறுவப்பட்டது. இரந்தும் தற்போது கடற்படை மற்றும் விமானப்படை களின் மாணவ அதிகாரிகளும் இக்கலூரியின் பயிற்சி நெறிகளை மேற்கொள்ளும் வகையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முப்படை மாணவ அதிகாரிகளுக்கான பாடநெறி இல- 1 ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வெளிநாட்டு மாணவர் அதிகாரிகளும் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.