--> -->

விமானப் படை விமான விபத்து : அரச பகுப்பாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஜனவரி 03, 2020

ஹப்புத்தலையில் இடம்பெற்ற விமானப் படை விமான விபத்து சம்பவத்திற்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளை சமர்பிக்குமாறு  அரச பகுப்பாய்வாளர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு  பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை விமானபடைக்கு சொந்தமான சீன தயாரிப்பு வை-12 ரக இலகு போக்குவரத்து விமானம் வீரவில விமானப்படைத் தளத்திலிருந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த நிலையிலேயே தம்பி பிள்ளை மாவத்தையிலுள்ள மலை பிரதேசத்தில் இன்று காலை 09.15 மணியளவில் விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த சம்பவத்தில் மேற்படி விமானத்தில் பயணித்த நால்வரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும்  பண்டாரவளை பொலிஸ் பிரிவின் பொலிஸ் குற்ற தடயவியல் அதிகாரிகள் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக விரைந்து அது தொடர்பான  விசாரணைகளையும்  ஆரம்பித்துள்ளனர்.

குறித்த விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில் இடம்பெற்ற தகவல் பரிமாற்றம் தொடர்பான  பதிவுகளும் மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படும் என ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.தயாரத்ன தெரிவித்துள்ளார்.

விமானம் விபத்திற்குள்ளான இடத்திற்கு அருகிலிருந்த பெண் ஒருவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடைபெற்ற பிரதேசத்திற்கு விஜயம் செய்து தடயங்களை நேரில் பார்வையிட்ட பதுளை மற்றும் மொனராகலை பிரிவுகளுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அசங்க கரவிட்ட இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்தில் அந்த விமானத்தைச் செலுத்திச் சென்ற விமானியான (பைளட்) ஸ்கொட்ரன் லீடர் டபிள்யு ஏ எம் பீ என் புத்தி வீபெத்த (35), உதவி விமானியான (கோ பைளட்) பிளைட் லெப்டினன்ட் கே எம் டி லங்கா புர குலதுங்க(28), விமானப் படையின் கண்காணிப்பு வீரர்களான சார்ஜன்ட் டி டபிள்யு ஆர் டபிள்யு குமார (30) மற்றும் லீடிங் எயார் கிராப்ட்மென் ஹெட்டியாராச்சி (37)     ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.தயாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

 இதேவேளை, விபத்து தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென இலங்கை விமானப்படையும் விஷேட குழுவொன்றை நியமித்துள்ளதுடன், அந்தக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
இது தொடர்பான செய்திகள் : இலங்கை விமானப் படை விமானம் ஹப்புத்தளையில் விபத்து