--> -->

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிஐடியினர் முன்னெடுக்கும் விசாரணைகளை துரிதப்படுத்த விஷேட செயலணி

பெப்ரவரி 23, 2020

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரனைகளை துரிதப்படுத்தி அதன் முன்னேற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சு விஷேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளது.

தேசிய புலனாய்வுத்துறை பிரதானியின் தலைமையிலான ஆறு பேர் கொண்ட இந்த விஷேட செயலணியில் பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் உள்ளடங்குவர். இந்தச் செயலணியினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பான வாராந்த அறிக்கைகள் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸினால்  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிற்கு சமர்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர், இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் நாயகம், குற்றப் புலனாய்த் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர், பயங்கரவாத முறியடிப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மற்றும் இலங்கை பொலிஸ் சட்ட பணிப்பாளர் ஆகியோர் இந்த விஷேட செயலணியில் உள்ளடங்குகின்றனர்.

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள தேவாலயங்கள் மற்றும் முன்னணி ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாக இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

"இந்த தாக்குதல்கள் தொடர்பாக சிஐடியினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் கடந்த ஆட்சியின் போது செயற்திறனற்ற முறையில் காணப்பட்டது.  எனவே இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணையை மேற்கொள்ளத் தவறினால் அது, இக்கொடிய தாக்குதலில் பலியான அப்பாவி பொதுமக்களுக்கும், படுகாயமடைந்த 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களுக்கும் நாங்கள் நீதியை பெற்றுக்கொடுக்க தவறியவர்களாகிவிடுவோம்.” எனவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 “பாதுகாப்பு அமைச்சின் கீழ்லுள்ள அனைத்து புலனாய்வுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை பாதுகாக்கும் வகையிலும் தாக்குதல்கள் தொடர்பான நம்பகத்தன்மையான தகவல்களை சேகரிக்கவும், இத்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றும் அவர்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும் புதிய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கவென ஏற்கனவே நியமிக்கப்பட்ட சில குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சமூகம் அதிருப்தி அடைந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை திரம்பட மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

"உயிரித்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை சிஐடி பகுப்பாய்வு செய்கிறதா என்பது எங்களுக்குத் தெரியாது. அவை தொடர்பாக முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள நபர்கள் யார், அவர்களுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் அவர்களை ஊக்கமளித்தவர்கள் யார் போன்ற உண்மையை நாங்கள் அறிய விரும்புகிறோம்,” என்று கர்தினால் கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

புலனாய்வு தரப்பினர்களின் பங்குபற்றுதல்கள் மேலும் தேவைப்படுவதாலும் சிஐடியினால்  முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை நடவடிக்கைகளுக்கு  ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும்; சரியான தகவல்களைப் பெறுவதற்கும் உண்மையை கண்டறியும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இவ்விஷேட செயலணி முறையான விசாரணைகளை முன்னெடுப்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

"எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதை  முக்கிய நோக்கமாக கொண்டே நாம் இந்த விஷேட செயலணியை உருவாக்கியுள்ளதாக"  அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 250ற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.