--> -->

இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸார் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்

பெப்ரவரி 29, 2020
  • வடக்கில் இருந்து 320 கிலோ கேரள கஞ்சா இராணுவத்தினரால்  மீட்பு

கேரள கஞ்சா உட்பட சட்டவிரோதமான போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவருவதைத் தடுக்கும் வகையில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாரும், அதனை ஒழிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாரும் இராணுவம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதேவேளை, போதைப்பொருள்  கடத்தல்காரர்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் சுற்றிவளைப்புக்களை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடமிருந்தி தனக்கு நேரடி உத்தரவு வந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

"பொலிஸ் விஷேட அதிரடிப்படியினருடன் இணைந்து இராணுவத்தினர் இன்று கைப்பற்றிய பாரிய அளவிலான கஞ்சா போதைப்பொருள் தொடர்பாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய  இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் ஒன்றிணைந்து சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு  மிகவும் சிறப்பான முறையில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும்,  இதேவேளை, இலங்கை இராணுவத்தினரும் போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் ஒருங்கிணைந்து முன்னெடுத்து செல்லும் பிரதான நோக்கில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்படுவதக தெரிவித்த அவர், "எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் வகையில்  போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நாங்கள் எம்மை அர்ப்பணித்துள்ளோம்," என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய போதைப்பொருள் மாபியாவினை முறியடிக்கும் வகையில்  இலங்கை இராணுவம் ஒரு விஷேட பிரிவொன்றை அமைத்துள்ளதாகவும், இலங்கையில் போதைப்பொருள் செயற்பாடுகளை முறியடிக்க அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு அர்ப்பணிப்புடன் முழு ஒத்துழைப்புக்களையும் இராணுவம் வழங்கிவருவதாகவும் பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.  

10 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய கொடிய பயங்கரவாதத்தை ஒழித்து முடிவுக்கு கொண்டுவந்த இராணுவத்தினருக்கு போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடும் ஒரு புதிய பணி வழங்கப்பட்டுள்ளதாகவும்  மேலும் அவர் தெரிவித்தார். நாட்டில் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள்  அதிகரித்துள்ள நிலையில், மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இது ஒரு பரந்தளவிலான பிரச்சினையாக  காணப்படுவதாகவும் எனவே இதனை கட்டுப்படுத்தும் பணி இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அனைத்து பாதுகாப்பு தலைமையகங்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், விசேடமாக வன்னி பாதுகாப்பு படை தலைமையாகத்திற்கு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்துள்ளார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெரும்தொகையிலான கேரளா கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை,  இராணுவத்தினர்   போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய விஷேட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

“தற்போது பாடசாலை மாணவர்களை குறிவைத்து அவர்களை கவரும் வகையில் பல்வேறு விதமான சட்டவிரோத போதைவஸ்துக்கள் காணப்படுவதாக தெரிவித்த அவர், எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்தன ஆகியோரினால் பாதுகாப்பு படைத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு மாதங்களில் வடக்கு மாகாணத்தில் இருந்து இன்று கைப்பற்றப்பட்ட 320 கிலோ கேரளா கஞ்சா உட்பட 383 கிலோ போதைப்பொருட்களை படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையினர் கடந்தவருடம் (2019) சுமார் 3.4 டோன் இற்கும் அதிகமான கேரள கஞ்சாவையும், கடந்த இரண்டு மாதங்களில் 1,127 கிலோ கேரள கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடந்தவருடம் (2019) 45,980 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு கேரளா கஞ்சா உட்பட 5,561 கிலோ போதைப்பொருள்களை கைப்பற்றியதுடன் 45,765 நபர்களையும் கைதுசெய்தனர். அத்துடன்  கடந்த இரண்டு மாதங்களில் 8,227 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு  1,092 கிலோ கஞ்சா போதைப்பொருள்களை கைப்பற்றியதுடன் 8,162 நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து காலி கடற்பரப்பில்  முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் பிரகாரம் சுமார் ரூபாய் .1,180 மில்லியன் பெறுமதியான 68 கிலோ ஹெரோயின் மற்றும் 50 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.