--> -->

பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது

ஜூலை 06, 2020

•     கல்வி அமைச்சின்  அறிவுறுத்தல்களுக்கமைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மேஜர் சந்து பண்டார  

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அரசாங்கம்  சகல பாடசாலைகளையும் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடியது. இவ்வாறு பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த  பாடசாலைகள் 115 நாட்களுக்கு பின்னர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக  இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கமைய,  கொழும்பு, மலே வீதியில் அமைந்துள்ள  பாதுகாப்பு சேவைகள் கல்லூரியும் கற்றல் கற்பித்தல்  நடவடிக்கைகளுக்காக  இன்று மீண்டும் திறக்கப்பட்டது.    

"இவ்வாண்டு மார்ச் 12ம் திகதி முதல் மூடப்பட்ட பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் முப்படை மற்று பொலிஸாரின் உதவியுடன் தொற்று நீக்கல் மற்றும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன" என பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் நிர்வாக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யூ.ஆர். பலிஹக்கார தெரிவித்தார்.   

ஆசிரியர்கள் உட்பட அனைத்து கல்வி சார்  உத்தியோகத்தர்களுக்கும்  தற்போதைய சூழ்நிலைகளுக்கேற்ப  கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு  சுகாதார அமைச்சு  மற்றும் கல்வி அமைச்சு ஆகியன  வழங்கிய வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்து   விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் அதிபர்  நிரோஷன் ஓபத,  பாதுகாப்பு அமைச்சின் உத்தியோக பூர்வ இணைய தளத்திற்கு தெரிவித்தார்.  

பாடசாலை மூடப்பட்டிருந்த  காலத்திலும்  தரம் 5 உட்பட சகல தரங்களிலும் கல்விகற்கும் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வகுப்புகளை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் ஓபத மேலும் தெரிவித்தார்.   

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலை மீள ஆரம்பிக்கும்   கல்வி அமைச்சின்  அறிவுறுத்தல்களுக்கமைய தரம் 5, 11 மற்றும் 13 மாணவர்களுக்காக பாடசாலை இன்றையதினம்  மீள திறக்கப்பட்டது. இதன்போது பெற்றோருக்கும் மாணவர்களுக்கும்  முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுதல் உள்ளிட்ட அவசியமான விதிமுறைகள் தொடர்பாக  விளக்கமளிக்கப்பட்டதாக  அவர்  குறிப்பிட்டார்.

படிப்படியாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முதற் கட்ட நடவடிக்கையாக கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய  ஜூன் 29ம் திகதியன்று பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் நாடளாவிய ரீதியில் தமது  பணிகளை ஆரம்பித்தனர்.  

பாடசாலைகளின் கற்றல்  மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக 5, 11 மற்றும் 13ஆம் தரங்களைச் சேர்ந்த  மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.  

மூன்றாம் கட்ட நடவடிக்கையாக 10 மற்றும்  12ம் தரங்களுக்கும்,  அதனைத் தொடர்ந்து நான்காம் கட்ட நடவடிக்கையாக 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆகிய  தரங்களுக்கும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.   

இதேவேளை, முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படம் / வீடியோ : சார்ஜன்ட்  ஜெயவர்த்தன & கோப்ரல் டயஸ்