--> -->

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தமது துறைசார் அறிவைப் பகிர்ந்து கொள்ள இலங்கை புத்திஜீவிகள் முன்வருகை

ஏப்ரல் 10, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான பொறிமுறையைக் கண்டறியும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், புத்திஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக கல்வியாளர்கள் உள்ளடங்கிய நிபுணத்துவ குழு ஒன்று, துறைசார் அறிவு மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளைப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது.

ராஜகிரிய, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் நடைபெற்ற சந்திப்பில், சிங்கப்பூர் சமூக மருத்துவ துறை சார்ந்த சிரேஷ்ட வைத்தியர். சந்திர குருலுரத்ன மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எல்பிஎஸ். ரோஹித ஆகியோர் முறையே 'விரைவான மொபைல் ஸ்கிரீனிங் / சோதனை வசதிகள்' மற்றும் 'கரோனா வைரஸுக்கான மருத்துவம் சாரா சிகிச்சை முறைகளைத் தடுத்தல்' தொடர்பாக விரிவாக விளக்கமளத்தனர்.

அத்துடன் 'இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள ஸ்தம்பிதம் : அதிலிருந்து வெளியேறும் வியூகம்' எனும் தலைப்பில் ஆறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இணைந்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜனக டி சில்வா, ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் லேகம்வசம், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எச்ஏஎம். குலரத்ன , ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிசிர சிரிபத்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கமணி வனிகசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள், கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார விளைவுகள் தொடர்பாகவும் இது போன்ற இறுக்கமான சூழ்நிலைகளில் மக்களின் அன்றாட தேவைகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதேவேளை, தற்போது நடைபெற்று வரும் 'செயல் திட்டம் / தகவல் தொழில்நுட்ப கண்காணிப்பு உத்தி' தொடர்பாக திரு சஞ்ஜீவ வீரவர்தன விளக்கமளித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.