--> -->

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் அரசினால் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள்- பாதுகாப்பு செயலாளர்

ஏப்ரல் 21, 2020
  • தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ இடமளிக்கப்படமாட்டாது என தெறிவிப்பு
  • குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும்.

சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும் அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை,  திட்டமிட்டு, நிதியுதவியளித்து, ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகியவற்றில் உள்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத குழுவினால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், நாட்டு மக்கள் அனைவருக்கும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திலிருந்து பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 "நாம், எமது நாட்டு மக்கள், இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்களினால் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகளை, அதன் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காணும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் உதவி மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய, நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவை பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.