--> -->

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் நடமாட்டங்களை குறைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தல்

மே 10, 2020

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்காகவே அன்றி வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.    

மேலும், பொது போக்குவரத்தானது, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் பொது மக்கள் அத்தகைய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயலணியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.    

ராஜகிரியவில் உள்ள கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

மேலும் கருத்து வெளியிட்ட அவர், இன்று அதிகாலை மேலும் 272 இலங்கையர்கள் அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.    

அத்துடன், மலேசியாவில் இருக்கும் மற்றுமொரு குழு இலங்கையர்கள், இன்று மாலை நாட்டுக்கு வருகை தர உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.    

"கடந்த சில வாரங்களில், அனைத்து இலங்கையர்களும் கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க அர்ப்பணிப்பு மிகுந்த தமது பங்களிப்பை வழங்கினர். இதே போன்று பொதுமக்கள் நலன் கருதி வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க பொலிஸ், முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையினருக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு மிகுந்த கடமையாகும்" என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தினார்.