--> -->

திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விமானப்படையினரால் கல்வி புலமைப்பரிசில்கள்

பெப்ரவரி 01, 2019

லங்கை விமானப்படையினர், விமானப்படை வீரர்கள் மற்றும் அதில் பணிபுரியும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளது கல்வி சாதனைகளை கௌரவிக்கும் வகையிலான நிகழ்வொன்றினை நேற்று (ஜனவரி, 31) ஏற்பாடுசெய்திருந்தனர். விமானப்படை தலைமையக கேட்போர் கூடத்தில் ஏற்பாடுசெய்திருந்த இந்நிகழ்வில், தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.தா. உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய படை வீரர்கள் மற்றும் சிவிலியன்களின் பிள்ளைகளே இவ்வாறு பாராட்டப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 175 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற (111) நூற்றி பதினொரு மாணவர்களுக்கும் மற்றும் க.பொ.தா. உயர் தரபரீட்சையில் மூன்று "A" சித்திகளை பெற்ற ஒரு மாணவருக்கும் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிதி அன்பளிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சேவா வனிதா பிரிவின் அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.