--> -->

சட்டவிரோதமான முறையில் வாகனங்களை பறிமுதல் செய்ய இடமில்லை - ஜனாதிபதி

ஜூன் 13, 2020

கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பறிமுதல் செய்யவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு அறிவிக்காமல் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடைமுறையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பறிமுதல் செய்ததன் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை பொறுப்பேற்க வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் பரவலை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு குழுவினருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்படும் குத்தகை கடன் தவணையை அறவிடுவதை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட 16/2020 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் இரண்டாவது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.