--> -->

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகளை மீள அழைக்கும் பணிகள் ஆரம்பம்

ஜூலை 29, 2020

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப எதிர்பார்த்திருக்கும் இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு மீள அழைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, ஜூலை 31, ஆகஸ்ட் 01ஆம் திகதிகளில் டுபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் இருந்து  275 பேர் கொண்ட இரண்டு குழுக்களை உள்ளடக்கிய இலங்கைப் பிரஜைகளுடன் இரு விமானங்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் (ஒய்வு) ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்குட்படுத்த தேவையான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்தார்.

மேலும், நாடு திரும்புவதற்கான கால அட்டவணைகள் சூழ்நிலைக்கு ஏற்ப சாதகமாக பரிசீலிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் நிலைமை மற்றும் தனிமைப்படுத்தப்படும் வசதிகள் ஆகியவற்றை சீர் செய்யும் வரை வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை  நாட்டிற்கு மீள அழைத்துவரும் பணிகள் ஜூலை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள  இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைப்பதற்காக  ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானங்கள்  ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.