--> -->

அமைதியான தேர்தலுக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பொலிஸ்

ஆகஸ்ட் 04, 2020

நியாயமானதும் அமைதியானதுமான தேர்ததலினை உறுதிபடுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 69 ஆயிரத்து 500ற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இதற்காக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் நடமாடும் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக 1933 எனும் புதிய அவசர அழைப்பு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தலின் போதும் தேர்தலுக்கு பின்னரரான காலத்தின் போதும் நாட்டில் அமைதி நிலைமையை உறுதிப்படுத்துவதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.