--> -->

சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் கடத்தல் நடவடிக்கை கடற்படையினரால் முறியடிப்பு

ஆகஸ்ட் 12, 2020

கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் 6,381 கிலோ மஞ்சளினை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்த 13 சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

சட்டவிரோதமாக மஞ்சளினை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நால்வரை மஞ்சளுடன் சேர்த்து சிலாபம் கடற்பரப்பின் 10 கடல் மைல் தொலைவில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர். மேலும் குறித்த பகுதியில்  பிராந்திய கடலோர பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்த கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 9 பேர் மினி வேன் மற்றும் 2.2 மில்லியன் ரூபா ரொக்கத்துடன் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட கட்டுகஸ்தோட்டை, கண்டி, பேருவளை, மற்றும் தொடுவாவை பகுதிகளைச் சேர்ந்த 27 முதல் 66 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர்.

இதன் போது கைப்பற்றப்பட்ட மஞ்சள் பொதிகள் மேலதிக நடவடிக்கைகளை இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கடலில் வைத்து கைது செய்யப்பட்ட நால்வரும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேபோன்று சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1000 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று ஜூலை 28ம் திகதி மன்னார் கடற்பரப்பில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.