--> -->

அரச நிறுவனங்களில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பாதுகாப்பு செயலாளர்

ஆகஸ்ட் 19, 2020
  • பொலிஸ் சேவை மக்களுக்கு நியாயமான சேவையை செய்ய வேண்டும்
  • மக்களுக்காக  பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதும் தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாகும்

மோசமான மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு சில மோசமான அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் பல சிறந்த அதிகாரிகளின் கௌரவமும் இணைந்து பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சில அதிகாரிகளினால் "அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் செல்லாக் காசாக மாறியுள்ளன," என தெரிவித்ததுடன், அரச துறையை ஊழலிலிருந்து விடுவித்து திறன்பட செயல்படுத்துவதன் ஊடாக திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காலியில் உள்ள ஹோல்-டி-கோலில் இன்று (ஆகஸ்ட்,19) இடம்பெற்ற பொலிஸ் பிரிவுகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் அமர்வின் போது தென் மாகாண பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், அரச துறையில் புரையோடியுள்ள ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்ததுடன், அதிகாரிகள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ், அளப்பரிய தியாகங்கள் பலவற்றைச் செய்துள்ளதுடன், அவர்களின் சேவைக்காக பல பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும் நாட்டில் பொலிஸ் சேவையைப் பொறுத்தவரை, அதன் தற்போதைய நிலை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அவர்கள் மீண்டும் சிந்திக்க வேண்டியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“ஒரு நாட்டின் பொலிஸ் சேவையின் காரணமாகவே மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள், இந்த சேவை இல்லாமல் ஆகும்போது மக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் ஆகியன இழக்கப்படுகிறது. எனவே, நீதியான மற்றும் அமைதியான சமுதாயம் நிலைபெற பொலிஸ் சேவையானது ஊழலற்ற சேவையாக இருக்க வேண்டும், ”என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் வன்முறையற்ற ஒரு நீதியானதும் அமைதியானதுமான தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கு பொலிஸார்  செய்த பங்களிப்பை இதன்போது பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்.

இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்து மீண்டும் நிலைநாட்டுவார் எனும் நம்பிக்கையுடனேயே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் பாதுகாப்பைக் குறிக்கும்போது, ​​அதற்கு பல அம்சங்கள் அடங்கியுள்ளன, மேலும் அவை அனைத்தும் ஒன்றாக இணைந்தாலே அது தேசிய பாதுகாப்பு என அழைக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் முதன்மையானது, பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு வழங்குவதாகும், இரண்டாவதாக சாத்தியமான வெளிப்புற ஆக்கிரமிப்பு மற்றும் மூன்றாவதாக இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பேரழிவுகள், தொற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்தல் என விளக்கமளித்த அவர், “மக்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவது தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை அரசியல் தலையீடுகளின்றி முன்னெடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கையாகும் என அவர் தெரிவித்தார்.

தென் மாகாணத்தில் உள்ள பொலிஸ் பிரிவுகள் மற்றும் நிலையங்களுக்கு எதிராக காணப்படும் சில விமர்சன ரீதியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, பொதுமக்களுக்கு நியாயமான சேவையை வழங்குவதற்கான சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக, கடமைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பொலிஸ் பிரிவுகளுக்கு அல்லது அந்தந்த பகுதிகளில் உள்ள நிலையங்களுக்கு எதிராக பெறப்பட்ட பொது முறைப்பாடுகள், மனுக்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய புதிய பொறிமுறை ஒன்றினை வெளிப்படுத்திய அவர், குறித்த முறைப்பாடுகள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் பின்தொடர்தல் சில வாரங்களுக்கு செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்காக அந்தந்த பொலிஸ் பிரிவுகள் அல்லது நிலையங்களில் தனித்தனி ஆவனங்கள் பேணப்பட வேண்டும் எனவும் அந்த முறைப்பாடுகளை விசாரிக்க மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு அந்த முறைப்பாடுகள் மாதந்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

உள்நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே கடமை புரியும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையானது, போதைப்பொருள் பரிவர்த்தனைக்கான முக்கிய மாற்றுப் பாதையாக மாறியுள்ளமை ஆச்சரியமளிப்பதாக மேஜர் ஜெனரல் குணரத்ன குறிப்பிட்டார்.

நாட்டின் பல பாகங்களிலும் திறமையான பொலிஸ் புலனாய்வு வலையமைப்பைத் தொடங்குவதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அந்தந்த பகுதிகளில் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்தல், சட்டவிரோத ஆயுதப் புழக்கம், நில ஆக்கிரமிப்புகள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் தீவிரமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் இருந்து செயற்படுத்தப்படும் போதைப்பொருள் வலையமைப்பை ஒழிக்க அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இந்த நடவடிக்கை மூலம் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து செயற்படுத்தப்பட்ட போதைப்பொருள் வலையமைப்பு முற்றாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

“சமூகத்தில் தவறு செய்பவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்.பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து இதை அடைவதை இலட்சியமாக கொண்டு செயல்படுகிறது” என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன, விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் ஜே சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.