--> -->

எம்ரீ நியூ டயமண்ட கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைக்க விமான மற்றும் கடற்படையினர் தீவிர போராட்டம்

செப்டம்பர் 08, 2020

தற்போதுள்ள காற்றுடன் கூடிய வானிலை மற்றும் தொடர் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் உலர் இரசாயன கலவைகளை வீசுவதன் மூலம் எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ, ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

எரிந்து கொண்டிருக்கும் மசகு எண்ணெய் கப்பலின் சிப்பந்திகள் 20 பேரும் இன்று(08) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் பின்னர் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கப்பலின் சிப்பந்திகள் அனைவரும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் மூலம் 500 கிலோ கிராம் உலர் தீயணைப்பு இரசாயன கலவைகள் வீசப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.