--> -->

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை எம் ரீ நியூ டயமன் கப்பலின் நிலைமை குறித்து ஆராய்வு

செப்டம்பர் 11, 2020

இலங்கை கடற்படையினருடன் இணைந்து அதன் மீட்பு நடவடிக்கைகளுக்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள்  எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு சுழியோடல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி தர்ஷனி லஹண்டபுற இன்று (11) தெரிவித்தார்.

குறித்த பாதிப்புக்குள்ளான கப்பலை அங்கிருந்து இழுத்துச்செல்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தலத்திற்கு அவர் மேலும் தெரிவித்தார்.

“சட்டமா அதிபர் திணைக்களத்துடன் சட்ட அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது” எனவும் இதன்போது லஹண்டபுற தெரிவித்தார்.

நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் கல்முனை துறையில் இருந்து சுமார் 45 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் தற்போதே தரித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா  சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

கடல்கொந்தளிப்பிற்கு மத்தியிலும் தொடர்ச்சியான ஆய்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

கப்பலின் இஞ்சின் அறை மற்றும் பம்பி அறைகள் என்பன கடல் நீரில் மூழ்கியுள்ளதுடன் கப்பலின் சாதாரண சம நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை , நேற்று (10) திருகோணமலை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுகேதென்ன, இந்திய கடலோர காவல்படை கப்பல் ‘அமேயா’ யாவின் கட்டளை அதிகாரிக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.