--> -->

தொழிற்சாலை உரிமையாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்

ஒக்டோபர் 14, 2020

அனைத்து ஆடை தொழிற்சாலை உரிமையாளர்களும், நிறுவன நிர்வாக பிரதிநிதிகளும் தங்கள் ஊழியர்கள் மூலம் சமூகத்தில் வெளி நபர்களுக்கு தொற்று தொற்று ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி  தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய  செயற்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற  ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நிறுவன நிர்வாக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது வெளி சமூகத்திற்குள் பரவலைத் தடுப்பதற்காக, நாடு தழுவிய தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய செயல் திட்டங்களின் தற்போதைய  நிலைமைகளை ஆழமாக ஆராய்ந்து, அவசரகால தடுப்பு நடைமுறைகள் மற்றும் அவசரநிலை என்பன குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர்,

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது  ஒரு நாளைக்கு மூன்று முறையாவது ஊழியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், அவர்களின் தங்குமிடங்களை ஆய்வு செய்தல், நெருங்கிய தொடர்புகள் மற்றும் அடிக்கடி கூடும் பொது இடங்களில் அவதானமாக செயற்படுதல், போக்குவரத்து முறைமைகளில் நெரிசலைக் குறைக்க வேலை நேரம் மற்றும் பணி முறைமைகளில் மாற்றம் செய்தல், உணவு வழங்கல் போன்றவற்றைச் செயல்படுத்துமாறு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் அனைத்து ஊழியர்களினதும் தகவல்களை புதுப்பித்தல், ஊழியர்கள் பயணம் செய்யும்  இடங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வசதிகளை ஏற்படுத்தல் என்பன தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேற்படி விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள அந்தந்த சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் உடன் நெருக்கமாக செயற்படுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.