logo

இந்து சமுத்திரத்தில் இதுவரை இல்லாதவாறு இலங்கை பெரும் பங்கு வகிக்கும் - பாதுகாப்புச் செயலாளர்

நவம்பர் 24, 2020

 

  •          எம்.டி. நியூ டயமண்ட் கப்பல் சம்பவத்தினால் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது  
  •          கொள்கை வகுப்பாளர்களுக்கு உதவவே  தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்
  •          பொருளாதார அவாவினால்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு புறக்கணிக்கப்பு

கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய "கடல் வழி" தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இந்து சமுத்திரத்தின் ஒரு கூறாக உள்ள இலங்கை, இந்து சமுத்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும் என குறிப்பிட்டார்.

அமெரிக்க கடற்படை அதிகாரியும் வரலாற்றாசிரியருமான அல்பிரட் தயர் மஹானினால் இந்து சமுத்திர பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகளை மேற்கோள் காட்டிய பாதுகாப்பு செயலாளர்,  "இலங்கையின் கடல் சார் பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தல்களை மறுவரையறை செய்யும் பொருட்டு, அதன் மூலோபாய முக்கியத்துவம் இந்து சமுத்திரத்தில் உருவாகிவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுடன் ஒப்பிடப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

'எம்டி நியூ டயமண்ட்' என்ற கப்பல் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை நினைவு கூர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன, எமது கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான எமது பொறுப்பை மீள வரையறுப்பதற்கு இந்த சம்பவம் ஒரு புதிய கண் திறப்பாக  பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில்  இன்று (நவம்பர், 24) இடம்பெற்ற “கொழும்பு கொன்கிலேவ் 2020”  தேசிய மாநாட்டின் அங்குரார்ப்பண  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கொழும்பு கொன்கிலேவ் 2020”   தேசிய மாநாடு, பாதுகாப்பு அமைச்சின் கீழ் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரதான சிந்தனைக் குழும அமைப்பான இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டது.

"இலங்கைக்கான விரிவான பாதுகாப்பு அமைப்பு திட்டம்"  எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த வருடத்திற்கான  மாநாட்டில் தேசிய பாதுகாப்பைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் விடயங்கள் தொடர்பாக  உள்நாட்டை சேர்ந்த பன்னிரண்டு கல்வியியலாளர்கள் கலந்து கொண்டு  தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

"தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மறுவரையறை செய்தல்", "ஆரோக்கியமான மருத்துவ வெளிப்படுத்தலுக்கான பேண்தகைமையை அங்கீகரித்தல்", "நாளைய பசுமையை நோக்கிய சுற்றுச் சூழல் பொறுப்புணர்வு" ஆகிய மூன்று உப கருப்பொருள்களில் இன்றைய சூம் தொழிநுட்பம் ஊடாக இடமபெற்ற மாநாட்டின் அமர்வுகளில் ஆராயப்பட்டன.  

இந்த மாநாட்டின் மூலம் தேசிய பாதுகாப்பு விடயங்கள்  தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த, கொள்கை சார் சிக்கல்களை  தீர்க்கும் உரையாடல்களில் ஈடுபட இலங்கையின் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுக்க்கான  தளத்தினை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் தொனிபொருள் குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் , "இது முக்கியத்துவமடைய  மூன்று உப கருப்பொருள்ககளையும்  ஒருங்கிணைக்கும் வகையில் இம்மாநாட்டின் பிரதான தொனிப்பொருள் அமைந்துள்ளதாக " குறிப்பிட்டார்.

"இந்த மாநாடு, மதம் தொடர்பான தீவிரபோக்கு, தீவிரமயமாதல், தீவிரவாத ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை வெற்றி கொள்ள மேற்கொள்ளப்படும்  அரசாங்கத்தின் உறுதியான செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமைவதுடன்  அதை எதிர்கொள்வதற்கு சாத்தியமான வழிகளையும் வழிமுறைகளையும்  அடையாளம் காண வழிசமைக்கும்" என பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மீன் வளம், கடல் வளம்  மாசடைதல், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், எண்ணெய் மற்றும் இரசாயன கசிவுகள், தகவல் அறிவிக்கப்படாத மற்றும் முறைப்படுத்தப்படாத  சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள்  மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஏற்படும் பிரச்சினைகள்  நாம் நமது விளிப்புலனையும் செவிப்புலனையும் அவதானத்துடன் வைத்திருக்க வேண்டிய முக்கியமான பிரச்சினைகளாக மாறிவிட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார பாதுகாப்பில் அலட்சியம் எவ்வளவு கசப்பான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கொரோனா வைரஸ் நமக்கு நினைவூட்டியுள்ளது என குறிப்பிட்ட அவர், "சுகாதார பாதுகாப்பு கண்ணோட்டத்தில் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள தொற்றானது  உலகளாவிய ரீதியில் நாடுகளின்  ஸ்ரிதிதன்மைக்கு பெரும்  அச்சுறுத்தலாக மாறியுள்ளது " என குறிப்பிட்டார்.

தொற்றுநோய் பரவல்களை முன்கூட்டியே தேசிய அளவில் கணிப்பதில் இடைவெளிகள் காணப்படுவதாகவும், உலக அமைப்புக்களிடம் இருந்து வரும் தீர்வுகளை மட்டுமே சார்ந்திருக்கும் அபாயங்களையும் தெளிவாக இது சித்தரிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

 தொற்று நோய் ஏற்பட்ட வேளையில் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர்,  முன்கணிக்கப்படாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக  எதிர்வினையாற்றுவதற்கான முன்மாதிரியான திறனை நிரூபித்துள்ளது, இது திறமைவாய்ந்த முறையில் தொழில் வல்லுனர்களை பயன்படுத்தி, தகுதிக்கு ஒப்புதல் அளிக்கும் ஜனாதிபதியின் வாக்குறுதியை நிரூபிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த தொற்று நோயின் தீவிர பரவல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பல பரிமாணங்களில் நாட்டையும் பாதிக்கிறது, எனவே ஒவ்வொரு துறையிலும் தொழில் வல்லுனர்களிடையே வலுவான ஒத்துழைப்பின் அவசியத்தை இது  வலியுறுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.

"பகுப்பாய்வு மற்றும் துல்லியமான அனுமானங்களின் அடிப்படையில் மிகச் சிறந்த தீர்வுகளை கொண்ட முடிவுகளை எடுப்பவர்களுக்கு உதவுவதற்கு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் போன்ற தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் " என மேஜர் ஜெனரல் குணரத்ன வலியுறுத்தினார்.

இலங்கையின் பிரதான தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுமம் என்ற வகையில், தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான மற்றும் சிந்தனைத் தூண்டல் பாதுகாப்பு ஆய்வுகள் என்பன, நவீன பாதுகாப்பு அபிவிருத்திகளை அடையாளம் காண்பதற்கும் தேசிய பாதுகாப்பு கொள்கை உருவாக்கத்திற்கு, தேவையான முக்கிய தகவல்களை வழங்குவதற்கும் அடித்தளமாக இருந்து வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான முதன்மையான கோரிக்கையாக தேசிய பாதுகாப்பு இருப்பதை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், "இது அதன் குடிமக்கள், பொருளாதாரம் மற்றும் அதன் நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதும் ஒரு அரசாங்கத்தின் பிரதான கடமையாகவும் கருதப்படுகிறது" என தெரிவித்தார்.

"எனவே ஒரு அரசாங்கத்தின், அரசியல், பொருளாதாரம் இராணுவ பலம் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் தேசிய பாதுகாப்பபை மையப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"சுபீட்சத்தின் நோக்கு" எனும் ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடனம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட மேஜர் ஜெனரல் குணரத்ன, தற்போதைய சூழலில் பாரம்பரியமல்லாத அச்சுறுத்தல்களாக மாறியுள்ள "சுகாதாரம், உணவு சுற்றுச்சூழல் மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு குறித்த முக்கிய கருத்திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதே இத்தகைய மாநாட்டின் பிரதான விடயங்களாக கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

புவி வெப்பமடைதல் மற்றும் சாத்தியமான அணுசக்தி வீழ்ச்சி மற்றும் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றின் கட்டமைப்பிற்குள் கருதப்படும் பூகோள பாதுகாப்பின் தற்போதைய சுற்றுச்சூழல் பரிமாணங்கள் குறித்து கவனம் செலுத்திய அவர், “அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாற்றங்கள்  தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றுக்கு ஏற்றவாறு நுகர்வுகளை கட்டுப்படுத்தி செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
 
மேலும், சுற்றுச்சூழல்  மற்றும் தேசிய பாதுகாப்பு  தொடர்பான பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சிக்கென ஒரு தரப்படுத்தப்பட்ட தெளிவான பொறிமுறையின்மையை மேற்கோள்காட்டிய  அவர் " பொருளாதார நாட்டம் காரணமாக  பல நூற்றாண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்படும்  பின்விளைவுகள் நமது எதிர்கால தலைமுறைகளை பாதிக்கும் " எனவும் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளரும், தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பணிப்பாளர் நாயகமுமான  அட்மிரல் (ஓய்வு) பேராசிரியர் ஜெயநாத் கொலம்கேவினால் இந்த நிகழ்வின் வரவேற்புரை   நிகழ்த்தப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வினை நினைவு கூறும்  வகையில் பாதுகாப்பு செயலாளருக்கு அட்மிரல் பேராசிரியர் கொலம்பகேவினால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர். அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர். சஞ்சீவ முனசிங்க, முப்படைதளபதிகள், பொலிஸ் மா அதிபர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், தேசிய புலனாய்வு பிரதாணி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள்  கல்லூரியின் கட்டளைத் தளபதி, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர், இலங்கை கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம், விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி, நிபுணர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.