--> -->

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலதிக அதிகாரங்களுடன் மேலும் பலப்படுத்தப்படும் - பாதுகாப்பு செயலாளர்

ஜனவரி 26, 2023
  • தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் 12வது ஆராய்ச்சி கருத்தரங்கில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.
  • பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மத்தியிலும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் புறக்கணிக்கப்பட முடியாது என்றார்.
  • நிலச்சரிவுகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பது முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது என்றார்.

வரும் ஆண்டில், முன்மொழியப்பட்டுள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன சட்டத்தின் மூலம் கூடுதல் அதிகாரங்களுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் வலுப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

'பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மீள்தன்மையை கட்டியெழுப்புதல்' எனும் தொனிப்பொருளில் இன்று (ஜனவரி 26) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் 12வது ஆராய்ச்சி கருத்தரங்கு - 2022 இன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போதே ஜெனரல் குணரத்ன இக்கருத்துக்களை தெரிவித்தார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன வரவேற்புரையை நிகழ்த்தினார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கை தலைமைப் பிரதிநிதி யமடா டெட்சுயா விசேட உரை நிகழ்த்தியதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சிறிமல் அபேரத்ன சிறப்புரை ஆற்றினார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகக் சபை தலைவருமான பாதுகாப்புச் செயலாளர் தனது உரையில், 'பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நெகிழ்ச்சியை உருவாக்குதல்' என்ற கருப்பொருளின் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை முன்வைப்பதற்கும் அதன் பிரதிபலன்களை பங்கிட்டுக்கொள்ளவும் இந்த கருத்தரங்கு வாய்ப்பளிப்பதாக கூறினார். பேரழிவு மேலாண்மை என்பது ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சியின் இன்றியமையாத பகுதியாகும், இது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக புறக்கணிக்கப்பட முடியாது என மேலும் கூறினார்.

மனிதர்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்களில் பெரும்பாலானவை நிலச்சரிவுகளினால் ஏட்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், "நாட்டின் இன்றைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையில், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளைக் குறைப்பது, குறிப்பாக நிலச்சரிவுகளால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளை குறைப்பது முக்கியமான சவால்களில் ஒன்றாகும்” எனக்கூறிய அவர் "அதிகரிக்கும் நிலச்சரிவுகள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் நிலை நாட்டின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று" என்றார்.

பொருளாதாரம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடிய அபாய பகுதிகள் சிலவற்றை குறிப்பிட்டு அவர், "அதிகரித்துவரும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகள்” என்று குறிப்பிட்டார்.

பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பைப் பற்றி குறிப்பிடுகையில், இது பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்ட சர்வதேச கட்டமைப்பாகும் என்றார். புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இத்துறையில் மீள்தன்மையை அடைய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், புத்திஜீவிகள், ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச கூட்டாளர்களுக்கிடையேயான ஒத்துழைப்பின் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

பல ஆண்டுகளாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், பேரிடர் மேலாண்மையில் பல்வேறு துறைகளில் அதன் தொழில்நுட்ப திறன்களை விரிவுபடுத்தி, பல்வகைப்படுத்தியுள்ளது மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்த அவர்கள் வழங்கிய தொழில்நுட்ப ஆலோசனைகள், சமீப காலத்தில் நகர்ப்புற வளி மாசடைவு நிகழ்வுகளில் போது வழங்கிய தொழில்நுட்ப ஆதரவு 'தீகவாப்பிய ஸ்தூபி' மறுசீரமைப்புத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் தொடர்பில் வழங்கிய தொழிநுட்ப உதவி, 'கடுகன்னாவ' மற்றும் 'நல்லதன்னிய' போன்ற மண்சரிவு நிகழ்வுகளின் போது அரச நிறுவனங்களுக்கு குறுகிய காலத்திற்குள் தீர்க்கமான மற்றும் சரியான முடிவுகளை எடுக்க உதவின என தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், இந்நிகழ்வுக்கு அனுப்பிய செய்தியில் இக்கருத்தரங்கின் ஆய்வு முடிவுகள், பேரிடர் அபாயத்தைக் குறைப்பதில் நிச்சயம் பங்களிக்கும் என தான் நம்புவதாகவும் "பேரழிவு அற்ற பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இனி ஒரு கனவாக இருக்காது" எனவும் தெரிவித்திருந்தார்.
SABO திட்ட கையேடுகள், இலங்கையில் இரசாயன அனர்த்தம் தொடர்பில் முறையான மதிப்பீடு குறித்த கையேடு, இலங்கையின் நகர்ப்புற காற்றின் தரம் 2022 பற்றிய வருடாந்த அறிக்கை, நார் வலுவூட்டப்பட்ட நடைபாதைத் கற்களுக்காக பெறப்பட்ட காப்புரிமை உரிமம் பற்றிய காணொளி, செயல்விளக்கம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சால்ஃபோர்ட் பல்கலைக்கழக ஒத்துழைப்புடன் களுத்துறைக்காக உருவாக்கப்பட்ட நிலச்சரிவுகள் தணிக்கப்பட்ட இடங்கள் மற்றும் வாழ்க்கை ஆய்வக அமைப்பு ஆகியவையும் இந்நிகழ்வில் போது வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புச் செயலாளர் தலைமைப் பேச்சாளருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கிவைத்ததுடன் கலாநிதி ஆசிரி கருணாவர்தன இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் மற்றும் 'இலங்கையில் இரசாயனப் பேரிடர் அபாயத்தின் முறையான மதிப்பீடு' கையேட்டின் பிரதியொன்றையும் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கினார்.

இடர் முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர், இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் JICA பிரதிநிதிகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவன பிரதிநிதிகள், தொழில்துறை வல்லுநர்கள், இடர் முகாமைத்துவ நிலையம், வானிலை துறை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.