--> -->

உணவுப் பாதுகாப்பு துறைக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை முக்கியமானது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பெப்ரவரி 03, 2023

நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவை மிகவும் முக்கியமானதாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

வானிலை மற்றும் காலநிலை தகவல்களின் தேவை மற்றும் காலநிலை முன்னறிவிப்புகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட அவர், இத்தகவல்கள் விவசாயம், நீர், சுகாதாரம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதோடு, பொது மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பையும் அதிகரிக்கும் என்றார்.

வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு 'உலக உணவுத் திட்டம்' (WFP) அதன் ஒத்துழைப்ப்பை அடையாளப்படுத்தும் வகையில் வழங்கிய 'மல்டி-டாஸ்கிங் சர்வரை' கையளிக்கும் நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க வரவேற்புரை ஆற்றினார். திணைக்களத்தின் பணிப்பாளர் (ஆய்வு மற்றும் காலநிலை மாற்றம்) ARP வர்ணசூரிய அவர்கள் உலக உணவுத் திட்டத்தின் பங்களிப்புகள் தொடர்பில் உரையாற்றினார்.

உலக உணவுத் திட்டத்தினால் கையளிக்கப்பட்ட மிகவும் பெறுமதிமிக்க இக்கண்ணி உபகரணங்களுக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இது அனர்த்த முகாமைத்துவத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களை மேம்படுத்தும் உதவும் என மேலும் கூறினார், உலக உணவுத் திட்டத்தின் அடுத்த வேலைத்திட்ட சுழற்சியை 2027 வரை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர உள்ளதை குறித்து தான் மகிழ்ச்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

'உலக உணவுத் திட்டம்' (WFP) இன் இலங்கைக்கான இலங்கைப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திகி கருத்துத் தெரிவிக்கையில், WFP இலங்கையுடன் நீண்டகால ஒத்துழைப்பைக் கொண்டிருப்பதாகவும் அதன் ஈடுபாடு விரிவடைந்து வருவதாகவும் கூறினார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஹர்ஷ விதானராச்சி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் 'உலக உணவுத் திட்டம்' (WFP) பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.