--> -->

இராணுவ படையினரால் கெரண்டியெல்ல மலையில் வழிதவறிய உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்பு

பெப்ரவரி 21, 2023

உடுதும்பர மலைத்தொடரின் கெரண்டியெல்ல மலைஉச்சியில் வழிதவறிய உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 19) இலங்கை இராணுவப் படையினரால் மீட்கப்பட்டது.

உடுதும்பர மலைத்தொடரில் கடும் மழை காரணமாக வழிதவறிய 33 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11வது படைப்பிரிவின் 111 வது காலாட் படைப்பிரிவின் 1வது இலங்கை ரைபிள் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சுற்றுலாப் பயணிகள் நேற்று (பெப்ரவரி 18) கரண்டியெல்ல, உடுதும்பர மலைத்தொடருக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இருண்ட வானிலை மற்றும் கனமழை காரணமாக அவர்கள் திட்டமிட்டபடி மலையிலிருந்து இறங்கத் தவறிவிட்டனர்.

அவர்களின் இக்கட்டான நிலைமை குறித்து தகவல் கிடைத்ததையடுத்து இராணுவ மீட்புக்குழுவினர் அவ் இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

உடதும்பர பொலிஸாரும் மீட்பு நடவடிக்கைக்கு உதவியதாக இராணுவ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.