--> -->

தமது நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு இலங்கை இராணுவம் வழங்கும் பயிற்சி வசதிகளை மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார்

மார்ச் 16, 2023

இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களினால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளினருக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார்.

இலங்கை தமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உயர்தர மற்றும் தரமான பயிற்சிகளை வழங்குவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று மாலைதீவு மக்கள் அவர்களின் பல்வேறு தேவைகளுக்காக இலங்கைக்கு வரும் சந்தர்பங்களில் இலங்கை அதிகாரிகளினால் அவர்களுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புக்காக உயர்ஸ்தானிகர் பாயிஸ் தனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சிக்கு வருகை தந்த தூதுவரை, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார் .

அத்துடன் இருவருக்கிடையே இன்று (மார்ச் 16) இடம்பெற்ற சந்திப்பின் போது மாலைதீவு உயர்ஸ்தானிகர் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார்.

மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு அமைச்சுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயமாகவும், இலங்கையில் தனது பணிகளை புதிதாக பொறுப்பேற்ற பின்னர் பாதுகாப்பு செயலாளருடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாகவும் இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த உயர்ஸ்தானிகர் பாயிஸ் அவர்களை பாதுகாப்புச் செயலாளர் அன்புடன் வரவேற்றார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த உயர்ஸ்தானிகர் மாலைதீவு இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்ததுடன் ஜெனரல் குணரத்ன இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சுமுகமான உறவையும் இதன்போது நினைவு கூர்ந்தார்.

மேலும் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

உயர்ஸ்தானிகர் பாயிஸ் கடந்த மாதம் (பெப்ரவரி 02) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்தார்.

மேலும் இவர் ஒரு தொழில் ரீதியான கடல்சார் பொறியியலாளரும் ஆவார்.

இவர், இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் மாலைதீவு பொலிஸ் சபையின் தலைவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ஹசன் அமீர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.