--> -->

‘சந்தஹிரு சேயா அறக்கட்டளை’ யினால் அனுராதபுர வைத்தியசாலைக்கு
சிறுநீரக சுத்திகரிப்பு (டயலிசிஸ்) இயந்திரம் அன்பளிப்பு

ஜூன் 04, 2023
  • அனுராதபுர நீண்டகால சிறுநீரக நோயாளிகளுக்கு ரூபா 3.3 மில்லியன் மதிப்புள்ள சிறுநீரக சுத்திகரிப்பு (டயலிசிஸ்) இயந்திரம் மூலம் நிவாரணம்
  • அனுராதபுர போதனா வைத்தியசாலையானது போரின் போது காயமடைந்த இராணுவ வீரர்களின் சிகிச்சைக்கான வைத்தியசாலையாக இருந்தது

இவ் வைத்தியசாலையானது நாட்டின் யுத்தத்தின் போது படுகாயமடைந்த இராணுவத்தினருக்கு அவசர சிகிச்சைக்காக உன்னத சேவையை வழங்கியதாகவும், இவ் வைத்தியசாலையில் இரண்டு தடவைகள் தான் சிகிச்சை பெற்றதையும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதன் போது நினைவு கூர்ந்து குறிப்பிட்டார்.

இன்று (ஜூன் 04) அநுராதபுர பொது வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவுக்கு 33 இலட்சம் ரூபா பெறுமதியான சிறுநீரக சுத்திகரிப்பு (டயலிசிஸ்) இயந்திரம் ஒன்றை நன்கொடையாக வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது ஜெனரல் குணரத்ன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளரின் கருத்திட்டத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட ‘சந்தஹிரு சேயா அறக்கட்டளை’ மூலம் இந்த உன்னத பணிக்கு நிதி வழங்கப்பட்டதுடன், அந்த நிதியைப் பயன்படுத்தி செய்யப்படும் முதல் நன்கொடை இதுவாகும்.

இதன்போது, அன்றிலிருந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை நல்ல மனிதாபிமானத்துடனும், கருணையுடனும் கவனித்து வரும் சிறப்பு வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அநுராதபுர போதனா வைத்தியசாலையானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இராணுவம் மற்றும் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றியதன் மூலம் யுத்தத்தில் பெரும் பங்காற்றியது. இன்று இம்மாவட்டத்தில் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிறுவனங்களை மேம்படுத்துவது எமது இராணுவத்தின் கடமை எனத் தெரிவித்த ஜெனரல் குணரத்ன, இந்த வைத்தியசாலையின் எதிர்காலப் பணிகளுக்கு தனது சிறந்த ஆதரவை வழங்குவதாகவும் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தரும், ருவன்வெலிசேயா விகாரையின் பிரதம மதகுரு வணக்கத்திற்குரிய ஈத்தலவெடுனுவேவே ஞானதிலக தேரர் மற்றும் மகா சங்கத்தினர், அனுராதபுர மாவட்ட செயலாளர் ஜானக ஜயசுந்தர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித பண்டார, வன்னி பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பிக்க ரணசிங்க, 21ஆவது படைப் பிரிவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஸ் நாணயக்கார, போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் அஜந்த ராஜகருணா, இராணுவத்தினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.