--> -->

அனர்த்த இடர் முகாமைத்துவத்தில் ஜப்பான் ஒரு பன்முகத்தன்மை கொண்ட மற்றும் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தும் பங்கைக் கொண்டுள்ளது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஒக்டோபர் 11, 2023
  • இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம் (IORA) அனர்த்த இடர் முகாமைத்துவத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

இலங்கை தேசமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான கப்பல் பாதையில் அமைந்திருப்பதால் எண்ணெய் கசிவுகள் காரணமாக கடல்சார் அனர்த்தங்களுக்கு இலங்கை மிகவும் பாதிப்புள்ளாகிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான கடல்சார் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை ஆகியனவற்றுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு  முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச  உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் நேற்று (அக்டோபர் 10) இடம் பெற்ற அனர்த்த  இடர் முகாமைத்துவம் மற்றும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தினுடனான ஜப்பானின் பங்கு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்த இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக ஜப்பான் பல்வேறு வழிகளில் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்திற்கு உதவி வருகின்றது.

அறிவுப் பகிர்வு, தர மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்ற திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய நிறுவனங்களுடனான ஈடுபாடுகள் ஆகியவற்றின் மூலம், இந்தியப் பெருங்கடல் ரிம் சங்க உறுப்பு நாடுகளில் பேரழிவை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதில் ஜப்பான் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்துடன் இணைந்து லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஜப்பான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜப்பான் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் கௌரவ கொமுரா மசாஹிரோவும்  (Komura Masahiro) கலந்துகொண்டார்.

இந்த கருத்தரங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர், இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் அனர்த்த இடர் மேலாண்மையை செயல்படுத்துவதற்கான ஒரு தளத்தை இது உருவாக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தில் அனர்த்த இடர் முகாமைத்துவத்தில் ஜப்பானின் தலைமைப் பங்கை அமைச்சர் பாராட்டியதுடன், ஜப்பானிய கடலோரப்  பாதுகாப்பு படை இலங்கை கடலோரப் பாதுகாப்பு படைக்கு வழங்கிய ஆதரவையும் பாராட்டினார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட  சுனாமி அனர்த்தத்தின் போது ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இலங்கைக்கான  ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதிநிதி திரு. யமடா டெட்சுயா, கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பதில் பொது முகாமையாளர் ஏ.ஜே.எம். குணசேகர மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ் ரணசிங்க ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரவிநாத ஆரியசிங்க வரவேற்புரை ஆற்றினார்.

மேலும், கொத்தலாவல, பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் மற்றும் மூலோபாய மதிப்பீட்டு நிலையத்தின் ஸ்தாபகப் பணிப்பாளர் கலாநிதி ஹரிந்த விதானகே குழு கலந்துரையாடலை வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் லக்ஸ்மன் கதிர்காமர்  நிறுவகத்தின் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.