--> -->

தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நாம் மறந்து விடக்கூடாது

நவம்பர் 12, 2023

இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் “ஆயுதப்படையினர் நினைவு தினம் – 2023” பிரதான நிகழ்வு நேற்று (நவம்பர் 11) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபியின் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, ஜனாதிபதி இராணுவ நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் ஜனாதிபதியுடன் இணைந்து, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது வீரமரணம் அடைந்த போர் வீரர்கள் உட்பட தேசத்தின் பாதுகாப்பிற்காக துணிச்சலுடன் உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போர் வீரர்களின் நினைவுத் தூபியில் உள்ள விசேட நூற்றாண்டு நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், இராணுவ நினைவுத் தூபியின் 100வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விசேட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் கெளரவ சாந்த பண்டார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் த எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரண்ணாகொட, இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்கிரமரத்ன மற்றும் இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.