--> -->

மலையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும்

நவம்பர் 27, 2023

நிலவும் மழையுடனான வானிலை இன்று (நவ. 27) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை அவதானிப்பு நிலையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பரவலான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கந்தகெட்டிய பிரதேசத்தில் 60.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது புதன்கிழமை (நவ. 29) தென்கிழக்கு வங்கக் கடலில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

திருகோணமலையிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சிலாபத்திலிருந்து புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

வானிலை அறிவிப்புகள் தொடர்பில் மீனவ சமூகம் அவதானிப்புடன் இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்.