--> -->

மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து கொழும்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது

டிசம்பர் 05, 2023

மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து 13 மாவட்டங்களை உள்ளடக்கிய 39 பிரதேச செயலாளர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டமொன்று தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் ஏற்பாட்டில் நேற்று (டிசம்பர் 04) கொழும்பு ரமடா ஹோட்டலில் ஆரம்பமானது.

இந்நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்னவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கை மற்றும் மாலைதீவுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதித் தலைவர் அன்ட்ரூ கிரே அவர்களும் பாதுகாப்புச் செயலாளருடன் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.

தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இந்த மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை பிரதேச செயலாளர்களுக்கு மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிபுணத்துவ வல்லுநர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் குழுவினால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியானது, மனித கடத்தல் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச சட்டம், மனித கடத்தல் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் தேசிய எதிர்ப்பின் பங்கு போன்ற பல தலைப்புகளில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க, புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.