--> -->

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 11, 2023

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிசம்பர் 11) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இவ் அமைப்பின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் அவசரகால நிலைமைகளுக்கு பொறுப்பான பிரதி இயக்குநர், கலாநிதி வலேரி பெமோ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டனர்.
 
தெற்காசியாவில் தயார்நிலை மூலம் நிலையான தேசிய எதிர்பார்ப்பு நடவடிக்கையை (SNAP) தொடங்குவது தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டது.
 
குறித்த அமைப்பின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் அவசரகால நிலைமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி, திருமதி பிலார் பச்சேகோ, மீட்பு நடவடிக்கைகளுக்கான தயார்நிலைப் பணிப்பாளர் கலாநிதி சிசிர மதுரப்பெரும மற்றும் ஆசிய அனர்த்த  தயார்நிலை மையத்தின் நிர்மலா பெர்னாண்டோ ஆகியோர் இந்நிகழ்வின்போது கலந்துகொண்டனர்.

இவ் அமைப்பானது, இலங்கையில் பல திட்டங்கள் உட்பட பிராந்தியத்தில் அனர்த்த அபாய நிலைகளைக் குறைக்கும் முயற்சிகளுக்கு நீண்டகாலமாக உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க (ஓய்வு) அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.