--> -->

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சோமாவதி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

ஜனவரி 01, 2024

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சோமாவதி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நேற்று (டிசம்பர் 31) விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது சோமாவதி விகாரையின் பிரதம மதகுரு அவர்களும் இராஜாங்க அமைச்சருடன் சென்றிருந்தார்.

அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிக்குகள் மற்றும் மக்களின் நலம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

வெள்ளம் காரணமாக சோமாவதி விகாரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பிக்குகள் மற்றும் மக்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை தொடர்ந்து வழங்குவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பில் இலங்கை கடற்படையின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், வெள்ளம் வடிந்த பின்னர் டெங்கு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவியுடன் புனிதப் பகுதியைச் சுற்றி துப்புரவுத் திட்டமொன்றை முன்னெடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.