--> -->

இலங்கை-பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர்கள் தலைமையில் இலங்கை-பாகிஸ்தான் நான்காவது பாதுகாப்பு கலந்துரையாடல் ஆரம்பம்

ஜனவரி 03, 2024
  • இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

நான்காவது இலங்கை-பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (ஜனவரி 03) ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் இலங்கை பிரதிநித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கியதுடன், பாகிஸ்தான் பிரதிநித்துவப்படுத்தி அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஹமூத் உஸ் ஸமான் கான் தலைமை வகித்தார்.

கடந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் விரிவாக ஆராய்ந்ததுடன், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினர். அத்துடன் இருதரப்பு இராணுவ பயிற்சி பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு பயிற்சிகள் நிகழ்ச்சிகளை அதிகரிப்பது, கடல்சார் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல் மற்றும் இராணுவ தொழில்நுட்ப நிபுணத்துவ பரிமாற்றம் குறித்து இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டன.

இலங்கை-பாகிஸ்தான் பாதுகாப்பு உரையாடலானது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் வளர்ப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க தளமாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளில் பின்னணியில் இந்த உரையாடல் மூலோபாய கூட்டாண்மையின் ஒரு மூலக் கல்லாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், முப்படைத் தளபதிகள் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.