--> -->

சர்வதேச ஓபன் டேக்வாண்டோ ஆசிய சாம்பியன்ஷிப்பில் பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவர்கள் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர்

ஜனவரி 04, 2024

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச ஓபன் டேக்வாண்டோ ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

2023 டிசம்பர் 06 முதல் 11 வரை நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு, புருனே, நேபாளம், துருக்கி மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு கல்லூரியின் டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளரும் சர்வதேச டேக்வாண்டோ நடுவருமான ஷிரான் தில்ருக் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் 08 மாணவர்கள் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

15-17 வயதுக்குட்பட்ட 50 கிலோவுக்குட்பட்ட ஆண்கள் எடைப் பிரிவில் ஆதித்த ரவிரு தங்கப் பதக்கம் வென்றார். அலோகா மிஹிரன் மற்றும் ஹிமாயா ஹன்சாலி ஆகியோர் முறையே 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் 50-60 கிலோ எடைப்பிரிவு மற்றும் 45 கிலோ எடைப்பிரிவு பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கங்களையும், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கிரீன் பெல்ட் பிரிவில் சினாதி சதன்யா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

போட்டியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி மியோன் லீ மற்றும் சர்வதேச டேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் கலாநிதி சுங்வோன் சோவ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.