--> -->

இலங்கை வந்தடைந்த ஜப்பான் நிதியமைச்சரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார்

ஜனவரி 11, 2024

ஜப்பானின் நிதியமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும், நிதி துஷ்பிரயோகத்திற்கு பொறுப்பான அமைச்சருமான திரு. சுசுகி ஷுனிச்சி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஜனவரி 11) இலங்கையை வந்தடைந்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜப்பானின் நிதியமைச்சரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, ஜப்பானிய அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் தென்னகோனுக்கும் இடையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள விசேட அதிதிகள் அறையில் இடம்பெற்ற இருதரப்புச் சந்திப்பில், இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜப்பானிய அமைச்சர் சுனிச்சிக்கு அமைச்சர் தென்னகோன் நன்றி தெரிவித்தார்.

அதேபோன்று, ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜப்பானிய அமைச்சர் இராஜாங்க அமைச்சர் தென்னகோனிடம் நன்றி தெரிவித்தார்.

ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியுள்ள ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரி மற்றும் பல்வேறு இராஜதந்திர அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்த உள்ளனர்.

மேலும், அமைச்சர் ஷுனிச்சி மற்றும் தூதுக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கை பாராளுமன்றம், ஜயவர்தன நிலையம், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை, கொழும்பு கப்பல்துறை மற்றும் மஹரகமவில் உள்ள லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அதிமேதகு மிசுகோஷி ஹிடேகி, இலங்கையில் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் ஜப்பானிய அமைச்சரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.