--> -->

76வது தேசிய சுதந்திர தின விழாவை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்

ஜனவரி 31, 2024

நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (ஜன.31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தின வைபவத்தின் பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக சுதந்திர தின அணிவகுப்பானது முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகிய பிரிவுகளை சேர்ந்த 259 அதிகாரிகள் மற்றும் 6227 படை வீரர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மூன்று (03) இலங்கை கடற்படை கப்பல்கள், பத்தொன்பது (19) இலங்கை விமானப்படை விமானங்கள் மற்றும் முப்படை மற்றும் பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது (40) பரசூட் வீரர்கள் இந்நிகழ்வை அலங்கரிக்கும் அதே வேளையில் இலங்கை கடற்படை கப்பலான 'சயுர' நாட்டுக்கு மரியாதைச் செலுத்தும் முகமாக தனது வழமையான 25 பீரங்கி வேட்டுக்களை நிகழ்த்தும் என ஜெனரல் குணரத்தன தெரிவித்தார்.

இதனுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் மரநடுகை நிகழ்ச்சி மற்றும் மூலிகை வளர்ப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பெப்ரவரி 02ஆம் திகதி கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

அத்துடன், சுதந்திர சதுக்கத்தில் இரவு முழுதும் பிரித் ஓதுதல் உள்ளிட்ட சமய அனுஷ்டானங்களும், அடுத்த நாள் அன்னதானமும் பெப்ரவரி 2 மற்றும் 3ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், இந்த பிரதான நிகழ்வுக்கு இணைந்ததாக 'தேசத்தந்தை' கௌரவ டி.எஸ். சேனநாயக்க அவர்களின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு உட்பட ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பல தேசிய தலைவர்களின் உருவச்சிலைகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டவுள்ளது.
 
பொது போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒத்திகை மற்றும் பிரதான வைபவம் ஆகிய இரண்டும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, மேலதிக செயலாளர் (உள்நாட்டலுவல்கள்) எச்.எம். நந்தசேன மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.