--> -->

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பாதுகாப்பு கலந்துரையாடல்

பெப்ரவரி 07, 2024

பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டு செயல்படும் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி 07) பொது பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

“மத்திய கிழக்கில் பிராந்திய அம்சங்களை மாற்றுதல்: செங்கடலில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள்” என்ற கருப்பொருளில் இந்த பாதுகாப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலானது இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பதில் பணிப்பாளர் (ஆராய்ச்சி) கேர்ணல் நளின் ஹேரத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த இராணுவ ஆய்வுகளுக்கான மையத்தின் (CENJOWS) துணை உறுப்பினரும் ஐக்கிய இராட்ச்சியத்தின் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வருகை உறுப்பினருமாகிய கலாநிதி ஆனந்த் மிஸ்ரா அவர்கள் இந்த பாதுகாப்பு செயலமர்வின் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், முன்னாள் இராஜதந்திரிகள், தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கல்விமான்கள், ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இலங்கை ஆயுதப்படை மற்றும் இலங்கை பொலிஸ் பிரதிநிதிகள் உட்பட ஏராளமான தொழில்சார் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செயலமர்வின் பிரதம பேச்சாளரான கலாநிதி ஆனந்த் மிஸ்ரா அவர்கள், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அதிகரித்து வரும் செங்கடல் மோதலின் தற்போதைய சூழ்நிலையை தெளிவான முறையில் கோடிட்டுக் காட்டி தனது சிறப்புரையினை ஆரம்பித்தார்.

பிராந்தியத்தில் உள்ள பல்வேறு கப்பல் வழித்தடங்களின் காட்சி ஒப்பீடுகள் மற்றும் அவற்றின் எதிர்மறையான தாக்கம் மற்றும் செயல்படுத்தப்படக்கூடிய பரிந்துரைகள் ஆகியவற்றுடன் உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார அம்சங்களில் இந்த மோதல்களின் தாக்கம் என்பன குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், உணவு மற்றும் எரிசக்தி விலைகள் மீதான தாக்கம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் பொருளாதார தாக்கம் மற்றும் உலகளாவிய சூழலில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

அதன்பின், மேற்கூறிய உண்மைகளை கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் முன்னோக்கி பயணத்தை மேற்கொள்வதற்காக எடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டம் குறித்து இதன்போது எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, கேள்வி பதில் சுற்றில் விவாதிக்கப்பட்ட தலைப்பு தொடர்பான சில கேள்விகள் பார்வையாளர்களால் கேட்கப்பட்டன, போதுமான உண்மைகள் மற்றும் யதார்த்தமான தற்போதைய உதாரணங்களை முன்வைத்து பேச்சாளர் கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளித்தார்.

"மோதல் ஏற்பட்டால் ஒன்றும் செய்யாமல் இருப்பதே மிகவும் தர்க்கரீதியான நடவடிக்கை" என்று கூறிய கலாநிதி அனந்த் மிஸ்ரா, அந்த சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் வலியுறுத்தியதோடு, இலங்கையின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

சர்வதேச கடல்களுடனான தொடர்புகளில் ஈடுபடுவதில் இலங்கை கூடுதல் அனுபவம் மற்றும் புரிதலுடன் பயனடையலாம் என்றும் நட்பு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பயிற்சிகளுக்கு மேலும் தொடர்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும், போர் நிறுத்தம் மற்றும் உலகளாவிய பலதரப்பு ஈடுபாட்டின் முக்கியத்துவம் என்பன குறித்து மேற்கோள் காட்டி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், முன்னாள் உயர்ஸ்தானிகர்கலான திரு. பெர்னாட் குணதிலக்க மற்றும் திரு. எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி. பமீலா ஜே.டீன், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.