--> -->

தற்போதைய வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்

மார்ச் 14, 2024
  • இந்த நாட்களில் வறட்சியான காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தயாராக உள்ளது.
  • தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ், காட்டுத் தீ தண்டனைக்குரிய குற்றமாகும்.

நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்கும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று (மார்ச் 13) நடத்தினார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாட்டில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட மாதங்களில் நாட்டில் பெய்யும் மழையளவு குறைவடைந்தால், மாவட்ட அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களின் அதிகாரிகளினால் அதற்கான முன்கூட்டிய திட்டங்களை கையாண்டுள்ளனர்.
மேலும், மக்களுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு அசௌகரியங்களுக்கும், அனர்த்தங்களுக்கும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மாற்று வசதிகளை வழங்குவதற்கு தொடர்ந்தும் தயாராகி வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் சிலர் விலங்குகளை வேட்டையாடுவதில் முனைப்பு காட்டுவதாகவும் மற்றும் காட்டுத் தீயினால் மழை பெய்யும் என சில பிரிவினர் கூறுகின்ற கட்டுக்கதைகளின் பிரகாரம் கிராம மக்கள் காட்டுத் தீ மூட்டுவதை அவதானித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் கோருவதாகவும் அமைச்சர் தென்னக்கோன் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அமைச்சர் தென்னக்கோன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், காட்டுத் தீயை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் அதிகபட்ச தண்டனையை விதிக்க வன பாதுகாப்பு திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதுள்ள குறைபாடுகள் மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டிய விடயங்களை கருத்திற் கொண்டு சட்ட திருத்தத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் வெப்பமான மாகாணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெயில் இருக்கும் பகுதிகளில் குடிநீர் குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் வழங்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன. உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் தென்னகோன், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காட்டுத் தீ மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும், தற்போதுள்ள சட்ட கட்டமைப்பின் ஊடாக அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், முப்படையினர், தீயணைப்புப் படையினர் பாதுகாப்பு, மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் என்பன நாட்டிலுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பூமத்திய ரேகைக்கு அருகாமையில் உள்ள நாடு என்ற ரீதியில் எமது நாட்டை அதிக ஆவியாதல் கொண்ட நாடாக இனங்கண்டுள்ளோம் எனவும், இதுகுறித்து முறையான ஆய்வு நடத்தி, ஆறு, ஏரி, குளம் போன்றவற்றின் நீரைப் பயன்படுத்தும் வகையில் விவசாய அமைச்சின் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காட்டுத் தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.