--> -->

இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரிக்கு கென்யாவில் இராணுவ மரியாதை

மார்ச் 28, 2024

கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் பிரான்சிஸ் ஒமோண்டி ஒகொல்லாவின் அழைப்பின் பேரில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், ஆபிரிக்க பிராந்தியத்துடன் இலங்கையின் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் இடம்பெற்றதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வாவை கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஒகொல்லா மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோர் கென்ய விமானப்படை முழு இராணுவ மரியாதையுடன் வரவேற்றனர்.

இந்த உத்தியோகபூர்வ விஜயமானது இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையிலான பரஸ்பர நட்புறவையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது.

இந்நிகழ்வின் போது, கென்ய பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளின் உதவி பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் Charles Kahariri, இராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகள் உட்பட சிரேஷ்ட இராணுவ வீரர்களை இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரிக்கு அறிமுகப்படுத்தினார்.

மேலும், இந்த நிகழ்வில் கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அதிமேதகு வேலுப்பிள்ளை கனநாதனும் கலந்துகொண்டதாக குறித்த ஊடக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சில்வா தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கென்யாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர் ஏ எல்மியின் அழைப்பின் பேரில் கென்யாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு ஜெனரல் சில்வா மார்ச் 26ஆம் திகதி விஜயம் செய்து "அரசியலில் இராணுவத்தின் பங்கு" என்ற தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தினார்.

கென்ய தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டதைக் குறிக்கும் வகையில், கல்லூரி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

ஜெனரல் சில்வாவின் கென்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமானது இலங்கைக்கும் கென்யாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை அதிகரிப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமைகிறது குறிப்பிடத்தக்கது.