--> -->

ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை இராணுவக் குழு
லெபனான் புறப்பட்டுச் சென்றது

ஏப்ரல் 04, 2024

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) உள்ள இலங்கை படை பாதுகாப்பு குழுவிற்கு (SLFPC) 125 பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் 15வது குழு புதன்கிழமை (ஏப்ரல் 03) ஐ.நா பணிக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை இராணுவம் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் (மார்ச் 09) முதல் கட்டமாக ஐ.நா பணிக்காக சென்ற 12 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய 15வது SLFPC இன் முன்கூட்டிய குழுவை தொடர்ந்து இந்த குழு அங்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லெப்டினன்ட் கேர்ணல் டி.கே.டி.விதானகே தலைமையிலான குழுவில் 11 அதிகாரிகள் மற்றும் 114 ஏனைய பணியாளர்களை உள்ளடக்கியுள்ளது.

லெபனனில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தலைமையகத்திற்கு (UNIFIL) Naqoura மற்றும் UNIFIL இன் தேவைக்கேற்ப முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பை வழங்க இலங்கை FPC கடமைப்பட்டுள்ளது.

இந்நிலையில், UNIFIL க்கான 14 வது SLFPC குழுவானது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 02) தங்கள் பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினர். கடந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் ஐ.நா பணிக்காகப் புறப்பட்ட இந்தக் குழு கர்னல் டிபிஐடீ கலுஅக்கல தலைமையில் 10 அதிகாரிகள் மற்றும் 115 ஏனைய பணியாளர்கள் கொண்டிருந்தது.