பாதுகாப்பு அமைச்சின் 'பக்மஹா உலெல' புத்தாண்டு கொண்டாட்டங்களில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்
மே 17, 2025பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (மே 16) பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு 'பக்மஹா உலெல'கலாச்சார விழாவில் கலந்து சிறப்பித்தார். பாரம்பரிய விளையாட்டுகள், மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளால் நிறைந்த இந்த நிகழ்வில், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் அமைச்சின் அனைத்து பிரிவுகளிலும் சேவையாற்றும் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்கள் மிகுந்த உட்சாகத்துடன் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சின் நலன்புரிப் பிரிவால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இது இலங்கையின் வளமான கலாச்சார மரபுகளைக் கொண்டாடுவதற்கும், அனைத்து மக்களிடையே நட்புறவையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பத்தையும் வழங்கியது.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேரா மற்றும் மேலதிக செயலாளர்கள், தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் மற்றும் இராணுவ தொடர்பு அதிகாரி உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவின் சிறப்பம்சமாக பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள், கலாச்சார நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வின் சிறப்பம்சமான 'புத்தாண்டு குமரன்' மற்றும் 'புத்தாண்டு குமாரி' தெரிவு செய்யும் நிகழ்ச்சியில் அமைச்சின் பல இளம் ஊழியர்கள் இலங்கையின் பாரம்பரிய உடையணிந்து மேடையை அலங்கரித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களின் உற்சாகமான ஈடுபாட்டையும் விளையாட்டுத் திறனையும் பாராட்டி, ஜனாதிபதி திசாநாயக்க மற்றும் சிரேஷ்ட அமைச்சு அதிகாரிகள் பரிசுகளை வழங்கினார்கள்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற 'பக்மஹா உலெல' சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பாரம்பரிய உணர்வை எடுத்துக்காட்டுவதோடு, நமது கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தது.