80வது CISM பொதுச் சபை மற்றும் மாநாட்டை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்

மே 19, 2025

இன்று (மே 19) கொழும்பு கிராண்ட் மெய்ட்லேண்ட் ஹோட்டலில் , சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) 80வது பொதுச் சபை மற்றும் மாநாட்டை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் உட்பட இலங்கை இராணுவ தலைமை அதிகாரியும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இந்த சர்வதேச நிகழ்வு, இராணுவ விளையாட்டுத் துறை தலைவர்கள் மற்றும் CISM உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து இராணுவ விளையாட்டுகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கிறது. உலகளாவிய ரீதியில் விளையாட்டின் மூலம் ஆயுதப்படைகளிடையே சர்வதேச ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் தோழமையை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக இந்த மாநாடு செயல்படுகிறது.

தனது தொடக்க உரையில், மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) நாடுகளிடையே தொழில்முறை, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை ஊக்குவிப்பதில் இராணுவ விளையாட்டுகளின் பங்கை வலியுறுத்தினார். இலங்கை முதன்முறையாக இதுபோன்ற ஒரு உயர்மட்ட சர்வதேச நிகழ்வை நடத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார், இது விளையாட்டு மூலம் உலகளாவிய அமைதி மற்றும் இராணுவ ராஜதந்திரத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு வாரம் காலம் நடக்கும் இந்த மாநாட்டில் எல்லைகளைத் தாண்டி பாலங்களை உருவாக்குவதில் விளையாட்டு துரையின் பங்கை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், மூலோபாய திட்டமிடல் அமர்வுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் போன்றவை இடம்பெறும். இராணுவ விளையாட்டு துறையை நவீனமயமாக்கல், அதை விரிவுபடுத்துதல் மற்றும் உறுப்பினர்களிடையே உடல் மற்றும் உள நலனை மேம்படுத்துதல் போன்ற முக்கிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெறும்.

1948 இல் நிறுவப்பட்ட CISM, 140 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பல்துறை விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாகும். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் ஆயுதப்படைகளிடையே நட்பு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை 80 வது பொதுச் சபை மற்றும் மாநாட்டை நடத்துவது சர்வதேச இராணுவ அமைப்புகளுடனான நாட்டின் ஈடுபாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறைப்பதுடன் உலக அரங்கில் அதன் வளர்ந்து வரும் அந்தஸ்தை எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.