16வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

மே 19, 2025
  • உயிர்நீத்த யுத்த வீரர்களுக்கு நாட்டில் அஞ்சலி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க, இன்று (மே 19) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற 16வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில், தேசத்திற்காக உயிரை தியாகம் செய்த முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள (CSD) வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

வருடாந்தம் கொண்டாடப்படும் தேசிய போர் வீரர்கள் தினம், பல தசாப்த கால யுத்தத்திற்கு பிறகு அமைதி மற்றும் தேசிய ஒற்றுமையின் சகாப்தத்தை ஏற்படுத்தி, இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உச்சபட்ச தியாகத்தைச் செய்த வீரமிக்க படையினருக்கு அஞ்சலி செலுத்துகிறது.

யுத்த வீரர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியை தொடர்ந்து கௌரவ ஜனாதிபதி நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடந்து, இறுதி யுத்தத்தின் போது முப்படைகளுக்கு தலைமை தாங்கிய Field Marshal சரத் பொன்சேகா, Admiral of the Fleet வசந்த கரன்னாகொட மற்றும் Marshal of the Air Force ரொஷான் குணதிலக்க மலரஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்திற்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 28,000க்கும் அதிகமான வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 27,000 பேர் ஊனமுற்றனர், அவர்கள் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி போர்வீரர்கள் சக்கர நாற்காலிகளில் கடந்து செல்லும்போது அனைவருக்கு ஒரு உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைந்தது.

போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனமான ரணவிரு சேவா அதிகாரசபை, விழா தொடர்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ்மா அதிபர், CSD பணிப்பாளர் நாயகம், தேசிய மாணவ படையணியின் பணிப்பாளர், முன்னாள் படை தளபதிகள் மற்றும் உயிர்நீத்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

மே 2009 இல் மோதல்கள் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் மற்றொரு ஆண்டைக் குறிக்கும் இச்சந்தர்ப்பம் சுதந்திரத்தின் பெறுமதியை நினைவூட்டுகிறது. வலுவான, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் உறுதியுடன் முன்னேறுவோம்.