MRIA சுற்றளவு வேலி சேதங்கள் குறித்து 
 பாதுகாப்பு செயலாளர் தலைமையில் கூட்டம்                        
                        
                          ஜூன் 17, 2025                            
                        
                    மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) சுற்று வேலி தொடர்பான தற்போதைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (ஜூன் 17) கூட்டமொன்று நடைபெற்றது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் யானைகள் ஊடுருவுவதால் சுற்று வேலிக்கு ஏற்படும் தொடர்ச்சியான சேதங்கள் குறித்து இந்த கூட்டத்தின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் பொது பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டி பாதுகாப்பு செயலாளர், முப்படைகள் உட்பட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் உடனடி தீர்வு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல் வழங்கினார். தற்போதுள்ள சேதங்களை உடனடியாக சரிசெய்வது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இவ்வாறான சேதங்களை தடுக்க நீண்டகால மற்றும் நிலையான தீர்வை எடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது அப்பிரதேசத்தில் உள்ள வனவிலங்குகளின் சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளையும் கருத்தில் கொண்டு வேலியின் கட்டமைப்பை மேம்படுத்துவைத்து தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடத்தை சீர்குலைக்காமல் விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்த மற்றும் முன்னெச்சரிக்கை அணுகுமுறையின் அவசியத்தை பாதுகாப்பு செயலாளர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தீர்வுகளை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கிடையில் தொடர்ச்சியான தொடர்பை பேணுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.