அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

ஜூலை 21, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர (ஓய்வு) இன்று (ஜூலை 21) கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மேத்யூ ஹவுஸுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் உதவி பாதுகாப்பு ஆலோசகர் சேத் நெவின்ஸ் உடன் இருந்தார்.

அமெரிக்க தூதுக்குழுவினரை அன்புடன் வரவேற்ற மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு), இது இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது என்றார். அதைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, சைபர் பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

வலுவான பாதுகாப்பு உறவுகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவம், பொருளாதார வாய்ப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பில் கூட்டு ஈடுபாடுகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்து -பசுபிக் பிராந்தியத்தில் பரந்த மூலோபாய நலன்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே திறந்த தொடர்பாடல்களை பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. 

இச்சந்திப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்காக பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கும் பாதுகாப்பு இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.