சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 98 வது ஆண்டு விழாவின் போது இலங்கை-சீன பாதுகாப்பு உறவுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன

ஜூலை 31, 2025

சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) நிறுவப்பட்டதன் 98வது ஆண்டு விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நேற்று மாலை இந்த நிகழ்வு (ஜூலை 30) நடைபெற்றது.

 பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு)இந்நிகழ்வில் கலந்து கொண்டார். சீன மக்கள் குடியரசின் தூதுவர் அதிமேதகு குய் ஜென்ஹோங் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை அன்புடன் வரவேற்றார்.

இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர், இலங்கை ஜனாதிபதியின் சார்பாக சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் நவீன போர் மற்றும் பாதுகாப்பு துறையில் பல்வேறு சவால்களை சமாளிப்பதில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 98 ஆண்டுகால சிறப்புமிக்க வரலாறு, மீள்தன்மை மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பாராட்டினார்.

பல நூற்றாண்டுகளாக கலாச்சார பரிமாற்றம் மற்றும் 68 ஆண்டுகளுக்கும் மேலான முறையான இராஜதந்திர உறவுகளையுடைய இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஆழமான நட்பை அவர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கை ஜனாதிபதியின் சீனாவிற்கான வரலாற்று சிறப்புமிக்க அரசு விஜயத்தையும் சீன ஜனாதிபதியால் அவருக்களிக்கப்பட்ட வரவேட்பையும் அவர் நினைவு கூர்ந்தார். வரலாற்று சிறப்புமிக்க ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தில் பொதிந்துள்ள சுதந்திரம், தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளை இந்த விஜயம் மீண்டும் உறுதிப்படுத்தியது, அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை மேலும் வலுப்படுத்த வழி வகுத்தது, என்றார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது சீனாவின் உதவி, போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அபிவிருத்தி முயற்சிகளில் அதன் பங்களிப்பு மற்றும் இலங்கையுடனான சீனாவின் உறுதியான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பிரதி அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் தொழில்முறை பரிமாற்றத் திட்டங்களில், குறிப்பாக இலங்கை முப்படைகளின் செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதில், சீன விடுதலை இராணுவத்தின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள், முப்படைத் தளபதிகள், இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், சிரேஷ்ட கேர்னல் சோவ் போ, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.