பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
ஆகஸ்ட் 01, 2025இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு ரெமி லம்பேர்ட், நேற்று (ஜூலை 31) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பிரதி அமைச்சரும் பிரெஞ்சு தூதுவரும் பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்தல் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இலங்கையுடனான பிரான்ஸின் நீடித்த ஒத்துழைப்புக்கு பிரதி அமைச்சர் பாராட்டு தெரிவித்ததுடன், குறிப்பாக ரத்மலானையில் உள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) அமைந்துள்ள கடல்சார் ஆய்வுகளுக்கான பிராந்திய நிலையத்திற்கு (RCMS) வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துக்காட்டினார்.
தற்போதைய பிராந்திய பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், எதிர்கால இருதரப்பு ஒத்துழைப்புக்கான விடயங்களை ஆராயவும் இந்த சந்திப்பு ஒரு பயனுள்ள தளமாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பால்ட்ரியோவும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.