இலங்கைக்கு ரூ.400 மில்லியன் பெறுமதியான அனர்த்த நிவாரண உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியது
ஆகஸ்ட் 05, 2025சீன மக்கள் குடியரசு 400 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. மேற்படி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் (DMC) இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது.
சீன தூதுவர் அதிமேதகு குய் ஜென்ஹாங், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத துயகொந்தாவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். இலங்கை தொடர்ந்து அடிக்கடி இயற்கை அனர்த்தங்களை, குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மோசமான வெள்ள நிலைமைகளை எதிர்கொள்வதால், இந்த நன்கொடை ஒரு சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார் .
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்குவதை உறுதி செய்வதற்காக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் இந்த உபகரணங்கள் நிர்வகிக்கப்படும் என்றும், மாவட்ட ரீதியாக அதன் நிர்வாக அமைப்பு மூலம் பாவனைக்காக விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை எடுத்துரைத்த அவர், இந்த நன்கொடை அவசர காலங்களில் இலங்கையுடனான சீனாவின் உறவை பிரதிபலிக்கிறது என்பதை வலியுறுத்தினார்.
10 மில்லியன் யுவான் மதிப்புள்ள இந்த கணிசமான அனர்த்த நிவாரண உபகரணங்களில், மடிக்கக்கூடிய கட்டில்கள், கொண்டுசெல்லக்கூடிய குளியலறை மற்றும் மலசலகூடங்கள், மெத்தைகள், சமையலறை கட்டளைகள், காஸ் அடுப்புகள், கூடாரங்கள், அமானோ தகடுகள், படகுகள், லைஃப் ஜாக்கெட்டுகள், வெள்ளக் கட்டுப்பாட்டு அலகுகள், தண்ணீர் பம்புகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கழும் அடங்கும்.
இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக சீனா இதற்கு முன்னரும் உதவி வழங்கியுள்ளது. இந்த நன்கொடை, மனிதாபிமான ஆதரவு மற்றும் அவசரகால தயார்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த கூட்டாண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ திறன்களை வலுப்படுத்துவதில் சீனாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் திரு. கே ஜி தர்மதிலக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்), திரு. WSS மங்கல, சிரேஷ்ட உதவி செயலாளர் திரு. நாமல் லியனகே மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணியாளர் திரு. D அமானுல்லா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்துடன் சீன தூதரகத்தின் ஆலோசகர் (Mr.Tang Yandi) திரு. டாங் யன்டி மற்றும் இணைப்பாளர் Attaché ஷி சென் Ms. Shi Zhen. ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.