படை வீரர்களின் நலன் தொடர்பில் உறுதிப்பாட்டை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்
செப்டம்பர் 01, 2025குருநாகல், பாங்கொல்லவில் உள்ள அபிமன்சல-3 மற்றும் அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல-1 ஆகிய ஊனமுற்ற யுத்தவீரர்களுக்கான பிரத்தியேக நிலையங்களுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடந்த தினங்களில் செய்தார். இந்த விஜயம் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி மற்றும், ஊனமுற்ற போர்வீரர்களின் நல்வாழ்வுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.
இலங்கை இராணுவத்தால் நிறுவப்பட்ட அபிமன்சல நிலையங்கள் தேசத்திற்கு சேவை செய்யும் போது காயமடைந்த வீரர்களுக்கு குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான சிறப்பு இல்லங்களாக சேவையாற்றுகின்றன. வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்கும் இந்த நிலையங்கள், மருத்துவ ஆலோசனைகள், செயற்கை மற்றும் எலும்பியல் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் மனநல ஆலோசனை உள்ளிட்ட பல சேவைகள் இங்கு வழங்கபடுவதுடன், ஒவ்வொரு போர்வீரருக்கும் தேவைப்படும் கவனம், கண்ணியம் மற்றும் மரியாதை கிடைப்பதை உறுதி செய்கின்றன.
தனது விஜயத்தின் போது, பிரதி அமைச்சர் இரண்டு நிலையங்களிலும் சிகிச்சை பெறுபவர்களுடன் கதைத்து, அவர்களின் அனுபவங்களைக் கேட்டருந்தார் அத்துடன், அவர்களின் நலனுக்கான அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அவர்களுக்கு உறுதியளித்தார். தேசிய அமைதி மற்றும் பாதுகாப்பைப் நிலைநிறுத்துவதில் இந்த வீரர்கள் செய்த தியாகங்களுக்கு தேசத்தின் நன்றியை எடுத்துரைப்பதாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதி அமைச்சர், இந்நிலையங்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிடும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அவற்றின், செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தார். அத்துடன் இங்கு வழங்கப்படும் சேவைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இந்த நிலையங்களில் வழங்கப்படும் பராமரிப்பின் தரத்தை தொடர்ந்தும் பராமரிப்பது மட்டுமல்லாமல் அவற்றை மேம்படுத்த அமைச்சின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக இவ்விஜயம் அமைந்தது.
அபிமன்சல நிலையங்களுக்கான விஜயம், யுத்தவீரர்களுக்கான நாட்டின் நன்றி போர்க்களத்திற்கு அப்பால் நீண்டுள்ளது என்பதை நினைவூட்டுகின்றது. நீடித்த பராமரிப்பு மற்றும் முழுமையான மறுவாழ்வு மூலம், ஊனமுற்ற போர்வீரர்களின் துணிச்சல், தியாகம், கண்ணியம், இரக்கம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவுடன் மதிக்கப்படுவதை பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் கௌரவ. (Dr) நாமல் சுதர்ஷன, பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ. (Prof) சேன நாணயக்கார, மற்றும் கௌரவ. நிமல் பலிஹேன ஆகியோரும் இதன் போது கலந்துக் கொண்டனர்.