இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் தூதுவர்
பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

செப்டம்பர் 23, 2025

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் அதிமேதகு ரெமி லெம்பர்ட் (Rémi Lambert) தனது தூதுக்குழுவுடன் நேற்று (செப்டம்பர் 22) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும் அமைந்தது.

இச்சந்திப்பின் போது நடந்த கலந்துரையாடளில், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் ஆதரவை வழங்க தனது அரசாங்கத்தின் உடன்பாட்டை பிரான்ஸ் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

பாதுகாப்பு சீர்திருத்தங்களில் நிபுணத்துவ உதவியை வழங்குதல், இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல், குறிப்பாக பிரெஞ்சு மொழி கற்கைகளை உள்ளடக்குதல், அனர்த்த முகாமை மற்றும் தடுப்பு வசதிகளை வழங்குதல், வானிலை ஆராய்ச்சி திணைக்களத்திற்கு முன்கூட்டி எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குதற்கு ஆதரவு மற்றும் கூட்டுத் திட்டங்கள் மூலம் அவசரகால முகாமைத்துவம் பயிற்சியை வழங்குதல் போன்றவை இதில் அடங்கும்.

மேலும் இக்கலந்துரையாடலில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்ட ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் (KDU) இல் நிறுவப்பட்டுள்ள கடல்சார் ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் (RCMS) சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பிராந்தியத்தில் சிவில் மற்றும் இராணுவ நிபுணர்களுக்கு ஏற்றவாறு சிறப்பு பயிற்சி திட்டங்களை வழங்கும் ஒரு முக்கிய நிறுவனமாக RCMS உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் இலங்கை மற்றும் பிரான்ஸின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த சந்திப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.